வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 22 Nov 2020 10:00 PM GMT (Updated: 22 Nov 2020 5:32 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடந்த முகாமை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கைலாசகுமாரசாமி, துணை தாசில்தார் (தேர்தல்) செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடந்து வருகிறது. அதன்படி டிசம்பர் 15-ந் தேதி வரை வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கல், முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

இதற்காக 4 நாட்கள் சிறப்பு முகாமும் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் காலை முதல் மாலை வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்பங்களை வழங்குவார்கள். அந்த விண்ணப்பத்தை பெற்று வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம்.

வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை. அதை நாம் சரியாக நிறைவேற்ற வேண்டுமானால் நாம் வாக்காளராக கண்டிப்பாக இணைந்து கொள்ள வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் மாறுதல் இருந்தால் அதையும் இப்போதே மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் பிரச்சினை இல்லாமல் வாக்களிக்க முடியும். அதனால் 1.1.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் அனைவரும் வாக்காளராக இணைந்து கொள்ள வேண்டும்.

இதே போன்று வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story