உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கண்டனம்: திருச்செந்தூரில் தி.மு.க.வினர் சாலை மறியல் - அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்பட 96 பேர் கைது


உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கண்டனம்: திருச்செந்தூரில் தி.மு.க.வினர் சாலை மறியல் - அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்பட 96 பேர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2020 11:00 PM GMT (Updated: 22 Nov 2020 9:37 PM GMT)

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து நேற்று திருச்செந்தூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 96 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூர், 

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு தி.மு.கவினர் ‘விடியலை நோக்கி தமிழகம்‘ என்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். தற்போது நாடு முழுவதும் கொரானா தடுப்பு நடவடிக்கை அமலில் உள்ளது. இந்நிலையில் அனுமதியின்றி கடந்த 3 நாட்களாக தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்தின் 3-ம் நாளான நேற்று நாகை மாவட்டம், குத்தாலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய கோரி நேற்று மாலை திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ராஜபாண்டி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் ஜெபராஜ், மாவட்ட துணை அமைப்பாளர்கள் சுதாகர், அனஸ், கிருபாகரன், சச்சின் டெண்டுல்கர், பிரவீன், இளங்கோ, கணேசன், அருணகிரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பேரின்பராஜ், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், காயல்பட்டினம் நகர செயலாளர் முத்துமுகமது, இளைஞரணி அமைப்பாளர் கலீயூர் ரஹ்மான், உடன்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பயாஸ், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராம்பிரசாத், முன்னாள் கவுன்சிலர்கள் மணல்மேடு சுரேஷ், கோமதி நாயகம், திருச்செந்தூர் நகர இளைஞரணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், கருங்குளம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கொம்பையா உள்பட 96 பேரை தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இந்த திடீர் சாலை மறியலால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோன்று கருங்குளம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் கால்வாய் இசக்கி பாண்டியன் தலைமையில் செய்துங்கநல்லூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 தி.மு.க. வினரை செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் கைது செய்தார். சாலை மறியலால் நெல்லை- திருச்செந்தூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விளாத்திகுளம் பஸ்நிலையம் முன்பு தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற 200 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தான்குளம் ஒன்றியத்திலுள்ள அரசூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த இடைச்சிவிளை விலக்கு பஸ் நிறுத்தம் மெயின்ரோட்டில் அரசூர் பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளருமான தினேஷ் ராஜசிங் தலைமையில், தி.மு.க.வினர் திரளானவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 120 தி.மு.க.வினரை தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி கைது செய்தார்.

Next Story