இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்க விவசாயிகள் தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ள வேண்டும் - தென்காசி கலெக்டர் சமீரன் அறிவுறுத்தல்


இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்க விவசாயிகள் தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ள வேண்டும் - தென்காசி கலெக்டர் சமீரன் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 Nov 2020 4:00 AM IST (Updated: 23 Nov 2020 3:25 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ள வேண்டுமென தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்காசி,

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் காரீப் 2016 பருவம் முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த திட்டத்தின்கீழ் பதிவு செய்ததில் விவசாயிகளுக்கு ரூ.99 ஆயிரத்து 89 கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. காரீப் 2020 முதல் மத்திய அரசின் கொள்கை முடிவின்படி திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த புதிய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் காப்பீட்டு மானிய தொகைக்கான மாநில அரசின் பங்கு அதிகரித்துள்ளதால் கடந்த ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.721 கோடி தொகையை உயர்த்தி ரூ.1,470 கோடி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய திட்டத்தின்படி தென்காசி மாவட்டத்திற்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் இதனை செயல்படுத்தும். தற்போது ராபி சிறப்பு பருவம் 2020- 2021 க்கான அறிவிக்கை செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிசான நெல் காப்பீடு செய்யப்பட்டு வருகின்றது. பிசான நெல் காப்பீடு செய்ய இந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி கடைசி நாளாகும்.

பிசான நெற்பயிர் சாகுபடி தென்காசி மாவட்டத்தில் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மிதமான முதல் கனமழை பெய்து வருவதால் பயிர் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே இதுவரை இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யாத விவசாயிகள் அனைவரும் வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அல்லது பொது சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அல்லது வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம். பயிர் காப்பீட்டு தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதுமானது. அதாவது ஒரு ஏக்கருக்கு ரூ.444 மட்டும் பிரீமியம் செலுத்த வேண்டும்.

எனவே விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர் களையும் பூச்சி நோய் தாக்குதல் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களை அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சிவகிரி தாலுகாவில் வருவாய்த்துறை சார்பாக விஸ்வநாதபேரி கிராமத்தில் நடைபெறும் உட்பிரிவு பட்டா மாறுதல் குறித்த பணிகளை, மாவட்ட கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார். பின்னர் சிவகிரி நகர பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். சிவகிரி தாலுகா அலுவலகத்தில் அனைத்து பணியாளர்களையும் அழைத்து அறிவுரை வழங்கினார். அங்கு நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலகம், வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து அலுவலகம் ஆகிய பகுதிகளுக்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்து, சுகாதாரத்தை வலியுறுத்தி அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது சங்கரன்கோவில் உதவி கலெக்டர் முருகசெல்வி, சிவகிரி தாசில்தார் ஆனந்த், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வநாயகம், குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் ராமலிங்கம், தலைமையிடத்து துணை தாசில்தார் மைதீன் பட்டாணி, துணை தாசில்தார்கள் சரவணன், கருத்தப்பாண்டி உள்பட பலர் உடன் சென்றனர்.

Next Story