உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கண்டனம்: தென்காசி-சேரன்மாதேவியில் தி.மு.க.வினர் சாலை மறியல் - தனுஷ்குமார் எம்.பி. உள்பட 141 பேர் கைது


உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கண்டனம்: தென்காசி-சேரன்மாதேவியில் தி.மு.க.வினர் சாலை மறியல் - தனுஷ்குமார் எம்.பி. உள்பட 141 பேர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2020 10:00 PM GMT (Updated: 22 Nov 2020 9:55 PM GMT)

உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து தென்காசி, சேரன்மாதேவியில் தி.மு.க.வினர் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தனுஷ்குமார் எம்.பி. உள்பட 141 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி,

மயிலாடுதுறை குத்தாலத்தில் தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்திற்கு சென்றபோது கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று இரவு 7 மணிக்கு திடீரென தி.மு.க.வினர் மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கட்சிக் கொடிகளுடன் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன், நகர செயலாளர் சாதிர் உள்பட 50 பேரையும் கைது செய்தார்.

கடையநல்லூர் மணிக் கூண்டு அருகே கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் தனுஷ்குமார் எம்.பி. தலைமையில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, நகர செயலாளர் சேகர் உள்ளிட்ட 59 பேரை கடையநல்லூர் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

சேரன்மாதேவியில் ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு தலைமையில், நகர செயலாளர் மனிஷா செல்வராஜ் முன்னிலையில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செல்லத்துரை, துணை அமைப்பாளர் வக்கீல் வேல்முருகன் உள்பட 32 பேரை சேரன்மாதேவி போலீசார் கைது செய்தனர்.

Next Story