போதைப்பொருள் வழக்கில்: நடிகை பாரதி சிங், கணவர் சிறையில் அடைப்பு
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை பாரதி சிங் மற்றும் அவரது கணவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மும்பை,
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், இந்தி திரையுலகில் உள்ள போதைப்பொருள் புழக்கம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மும்பை அந்தேரியில் உள்ள காமெடி நடிகை பாரதி சிங்கின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டில் இருந்து 86.5 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் நடிகை பாரதி சிங்கை கைது செய்தனர். மேலும் அவரது கணவர் ஹர்ஷ் லிம்பாசியாவிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் விசாரணை நிறைவில் நேற்று அதிகாலை போதைப்பொருள் வழக்கில் அதிகாரிகள் நடிகையின் கணவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது போதைப்பொருள் பதுக்கி வைத்தது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று 2 பேரையும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது ஹர்ஷ் லிம்பாசியாவை விசாரணைக்காக போலீஸ் காவலில் ஒப்படைக்கும்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நடிகை குறித்து அவர்கள் தரப்பில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை.
ஆனால் அவர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் 2 பேரையும் வருகிற டிசம்பர் 4-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.
இதற்கிடையே நடிகை பாரதி சிங் மற்றும் அவரது கணவர் ஹர்ஷ் லிம்பாசியா ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
இது குறித்து நடிகை பாரதி சிங்கின் வக்கீல் அயாஸ் கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாரதி சிங் மற்றும் அவரது கணவர் மீது போதைப்பொருள் பதுக்கி வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரிவுகளின் கீழ் 6 மாதத்தில் இருந்து அதிக அதிகபட்சம் ஒரு ஆண்டு வரை தான் சிறை தண்டனை வழங்க முடியும். ஆனால் இது சிறைக்கம்பிகளுக்கு பின்னால் அடைக்கும் அளவிற்கு மிகப்பெரிய வழக்கு ஒன்றும் இல்லை. மிக குறைந்த அளவே அவர்களிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அப்படி இருந்தும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இப்படி நடவடிக்கை எடுப்பது ஆச்சரியமாக உள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவின் இலக்கு இதைவிட பெரியது.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் இதற்கு முன்பு எந்த குற்றப்பின்னணியும் இல்லை. எனவே அவர்கள் தலைமறைவாகி விடுவார்கள் என்ற கேள்விகே இடமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story