ஓசூரில் பயங்கரம்: இந்து மகா சபா மாநில செயலாளர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை - காரில் தப்பிய 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


ஓசூரில் பயங்கரம்: இந்து மகா சபா மாநில செயலாளர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை - காரில் தப்பிய 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Nov 2020 1:03 AM GMT (Updated: 23 Nov 2020 1:03 AM GMT)

ஓசூரில் இந்து மகா சபா அமைப்பின் மாநில செயலாளர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக காரில் தப்பிய 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொலை பற்றிய விவரம் வருமாறு.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சமத்துவபுரத்தில் வசித்து வந்தவர் நாகராஜ் (வயது 46). இவர் அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாநில செயலாளராக இருந்து வந்தார். மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் முன்னாள் நிர்வாகியான இவர் ரியல் எஸ்டேட் தொழில், வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற தொழில்களையும் செய்து வந்தார்.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வில்லங்கம் என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். தொழில் ரீதியாக இவருக்கும், சிலருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் எதிரிகளால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீஸ் பாதுகாப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணிக்கு அவர் வழக்கம் போல் சமத்துவபுரம் எதிரில் அனுமந்த நகரில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் அங்கு வந்தது. கைகளில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த அந்த கும்பல் நாகராஜை வெட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் விடாமல் அந்த கும்பல் ஓட, விட விரட்டி சென்று நாகராஜை சரமாரியாக வெட்டியது.

இதில் தலை, இடுப்பு, வயிறு உள்பட பல இடங்களில் வெட்டு விழுந்து சம்பவ இடத்திலேயே நாகராஜ் ரத்த வெள்ளத்தில் பலியானார். அவரை வெட்டிக்கொலை செய்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பி சென்றது. இதை நேரில் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் விரைந்து வந்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த கொலை தொடர்பாக சில தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று கூறினார். கொலை செய்யப்பட்ட நாகராஜிக்கு மஞ்சுளா என்ற மனைவியும், ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். அவர்கள் நாகராஜின் உடலை கண்டு கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இந்த கொலை குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பிய 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். ஓசூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்து மகா சபா அமைப்பின் மாநில செயலாளரை காரில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த பயங்கர சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story