புயல் எச்சரிக்கை எதிரொலி: வேதாரண்யத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரம் - மீன்பிடிக்க சென்ற மீனவர்களை கரை திரும்ப அறிவுறுத்தல்


புயல் எச்சரிக்கை எதிரொலி: வேதாரண்யத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரம் - மீன்பிடிக்க சென்ற மீனவர்களை கரை திரும்ப அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 Nov 2020 7:45 AM IST (Updated: 23 Nov 2020 7:45 AM IST)
t-max-icont-min-icon

புயல் எச்சரிக்கை எதிரொலியாக வேதாரண்யத்தில் முன்ஏற்பாடு பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்களை கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேதாரண்யம், 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, விழுந்தமாவடி, வெள்ளப்பள்ளம் உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. வேதாரண்யம் பகுதியில் 2 நாட்கள் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து வேதாரண்யம் தாலுகா மக்கள் மற்றும் மீனவ கிராமங்களில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் தங்கள் வீடு மற்றும் கால்நடைகள் தென்னை, மா மரங்களை மற்றும் படகுகள் வலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயல் வேதாரண்யம் பகுதியில் தான் வீசும் என்றும் பாதிப்புகள் குறித்து விளக்கி கூறிய தகட்டூர் பகுதியைசேர்ந்த வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் செல்வகுமார் மீண்டும் தற்போது 2 நாட்களில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த வேதாரண்யம் பகுதி மக்கள் இந்த புயல் அறிவிப்பால் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் கூரை வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்கு தார்ப்பாய் போட்டு மூடி உள்ளனர்.

ஓட்டு வீட்டில் வசிப்பவர்கள் ஓடுகளைப் பிரித்து பாதுகாப்பாகவும் வைத்து வருகின்றனர். வீடுகளின் ஓரமாக உள்ள தென்னை, மா மரங்கள் புயலில் பாதிக்காத வகையில் மரங்களில் உள்ள கிளைகள் மற்றும் தென்னை மட்டைகளை வெட்டி உள்ளனர். தாங்கள் வளர்க்கும் கால்நடைகளையும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று கட்டி வைத்துள்ளனர். கால்நடை தீவனமான வைக் கோல், கடலைத்தழை ஆகியவற்றை தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர்.

மேலும் பலத்த காற்று வீசும் என்ற அச்சத்தில் மின் பாதையில் உள்ள மரங்களை தாமாகவே முன்வந்து வெட்டி வருகின்றனர். வேதாரண்யம் பகுதியில் உள்ள மீனவ கிராமங்களான ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருக்கும் மீனவர்கள் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகளையும், வலைகளையும் டிராக்டர் உதவியுடன் மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்று நிறுத்தி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

புயல் அச்சத்தால் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான மளிகை, அரிசி, காய்கறி, மற்றும் மின்சாரம் தடைபட்டால் தேவைப்படும் மெழுகுவர்த்தி, டார்ச்லைட், பேட்டரி போன்றவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துள்ளனர். 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல்- டீசல் நிரப்பும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோடியக்கரையில் மீன் துறை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பட்டு அறையில் இருந்து கடலில் உள்ள மீனவர்களுக்கும் படகின் உரிமையாளர்களுக்கும் புயல் எச்சரிக்கை குறித்து தகவல் அளித்து விரைவில் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story