திண்டுக்கல்லில் பரபரப்பு: சாலையோரம் நிறுத்தியிருந்த 8 கார்களின் கண்ணாடிகள் உடைப்பு


திண்டுக்கல்லில் பரபரப்பு: சாலையோரம் நிறுத்தியிருந்த 8 கார்களின் கண்ணாடிகள் உடைப்பு
x
தினத்தந்தி 23 Nov 2020 8:07 AM IST (Updated: 23 Nov 2020 8:07 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், சாலையோரத்தில் நிறுத்தியிருந்த 8 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ராமர் காலனியில் இருந்து மாசிலாமணிபுரம் செல்லும் சாலையோரத்தில், அப்பகுதியில் வசிக்கிற மக்கள் தங்களது கார்களை இரவு நேரத்தில் நிறுத்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினமும் சாலையோரத்தில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்தநிலையில் நள்ளிரவில் 12.30 மணியளவில், 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் வந்தனர்.

இவர்கள், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு கார்களாக கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்தனர். இதில் 8 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மேலும் ஒரு ஆட்டோவும் சேதப்படுத்தபட்டிருந்தது. பின்னர் 5 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்று விட்டனர்.

இந்த நிலையில் மாசிலாமணிபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 29), அங்குசாமி (45), அனந்தநாராயணன் (38), சுவாமிநாதன் (49), முகமது பரூக் (35), முத்தழகு (35), திருநகரை சேர்ந்த மாலதி (45), சிலுவத்தூர் சாலை பழனி ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த கோபிநாதன் (35) ஆகியோரின் கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன.

நேற்று காலையில் எழுந்த அவர்கள் தங்களது கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திண்டுக்கல் வடக்கு மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், 5 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களில் வந்து கார்களை உடைத்து சென்றதாக அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை என்று கூறினார்.

இது தொடர்பாக 6 பேர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திலும், 2 பேர் திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ராமர்காலனியில் இருந்து மாசிலாமணிபுரம் வரை சாலையோரத்தில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. இதனால் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில் திருநகரில் பள்ளிவாசல் அருகே போலீஸ் துறை சார்பில் கண்காணிப்பு கேமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமராவை துருப்புச்சீட்டாக வைத்து போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த சாலையில், நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்களில் யார் சென்றார்கள்? என்பது குறித்த ஆய்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக, அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது கார்களை சாலையோரத்தில் நிறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை. தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதி அடைய செய்துள்ளது. அதேநேரத்தில் ராமர்காலனி-மாசிலாமணிபுரம் இடையே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்களின் கண்ணாடிகளை மட்டும் மர்ம நபர்கள் உடைக்காமல் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல்லில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த 8 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story