கோவை அரசு மருத்துவமனை அருகே தனியார் ஓட்டல் சாம்பாரில் - செத்த எலி கிடந்ததால் பரபரப்பு
கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் ஓட்டல் சாம்பாரில் செத்த எலி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் திவ்யா. இவருடைய தம்பி கார்த்திகேயன். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை திவ்யா, தனது தம்பி சாப்பிடுவதற்காக அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஆப்பம், சாம்பார் பார்சல் வாங்கினார்.
அதை மருத்துவமனைக்கு கொண்டு வந்து இருவரும் சாப்பிட தொடங்கினர். அதற்காக கவரை பிரித்து சாம்பாரை ஆப்பத்தில் ஊற்றினார். அப்போது சாம்பாரில் கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று கிடந்தது.
இதை பார்த்த அவர்கள் எடுத்து பார்த்த போது எலி செத்து கிடந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் தனது குடும்பத்தினருடன் அந்த தனியார் ஓட்டலுக்கு சென்று சாம்பாரில் எலி இருந்தது குறித்து கேட்டனர். உடனே ஓட்டல்காரர்கள் மன்னிப்பு கேட்டனர். ஆனாலும் சமாதானம் அடையாத அவர்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த ஓட்டல் முன்பு ஏராளமான பொதுமக்கள் கூடினர்.இந்த சம்பவம் தொடர்பாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே ஓட்டல் ஊழியர்கள் கடையின் ஷட்டர் கதவை மூடினர். இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், அரசு மருத்துவமனை அருகே உள்ள ஓட்டலில் இளம்பெண் வாங்கிய சாம்பாரில் செத்த எலி கிடந்தது குறித்து சம்பந்தப்பட்ட ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். தற்போது அந்த ஓட்டல் மூடப்பட்டு உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story