விழுப்புரம் அருகே கந்துவட்டி கொடுமை: குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை - மீதி இருந்ததை குடித்த மகளும் பலியான பரிதாபம்
விழுப்புரம் அருகே கந்துவட்டி கொடுமையால் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். மீதி இருந்ததை குடித்த அவரது மகளும் பரிதாபமாக உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள நாகந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 42). விவசாயி. இவரது மனைவி மங்கையர்கரசி. இவர்களது மகள்கள் ஐஸ்வர்யா(9), ஆர்த்தீஸ்வரி(7). கடந்த 2 ஆண்டுக்கு முன்பு விவசாய பணிக்காக நாகந்தூரில் டீக்கடை நடத்தி வரும் ராஜசேகர்(42) என்பவர் மூலமாக திண்டிவனம் இடையான்குளத்தை சேர்ந்த சம்பத் என்பவரிடம் இருந்து ரூ.25 ஆயிரத்தை அய்யப்பன் கடனாக பெற்றுள்ளார். அப்போது அய்யப்பனிடம், ராஜசேகர் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.50 ஆயிரம் தர வேண்டும். இல்லையென்றால் கையெழுத்திட்டு கொடுத்த வெற்று பத்திரத்தில் ரூ.2 லட்சம் கடன் பெற்றதாக எழுதி, கோர்ட்டில் வழக்கு போட்டு சொத்துக்களை ஜப்தி செய்து விடுவோம் என்று ராஜசேகர், சம்பத் ஆகியோர் மிரட்டினர்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அய்யப்பன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். கடனை செலுத்தாவிட்டால் சொத்துகள் பறிபோய்விடுமே, குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றுவது என்றும், தனது இரு பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றியும் சிந்தித்து மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி இருக்கிறார். யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் தவித்த அவர், இறுதியாக தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு சென்றார்.
கடந்த 20-ந்தேதி மாலை 5 மணிக்கு தனது வீட்டில் குளிர்பானத்தில் விஷம் கலந்து அய்யப்பன் குடித்தார். அப்போது, அவருக்கு உடனடியாக வாந்தி வந்தது. இதனால் விஷம் கலந்த குளிர்பானத்தின் பாதியை வீட்டின் உள்ளேயே வைத்து விட்டு வெளியே ஓடி வந்து, வாந்தி எடுத்தார்.
இதற்கிடையே தெருவில் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஆர்த்தீஸ்வரி வீட்டுக்கு வந்தார். அங்கு இருந்த குளிர்பானத்தை பார்த்த அந்த சிறுமி, அதில் விஷம் கலந்து இருப்பது தெரியாமல், ஆசையாக எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் சிறுமியும், அய்யப்பனும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மங்கையர்கரசி மற்றும் அக்கம்பக்கத்தினர் அவர் களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர் கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அய்யப்பன், ஆர்த்தீஸ்வரி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி மங்கையர்க்கரசி, பெரியதச்சூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி கந்துவட்டி கேட்டு மிரட்டியதாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் ராஜசேகர், சம்பத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராஜசேகர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான சம்பத்தை போலீசார் வலைவிசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்த அய்யப்பனின் உறவினர்கள், தலைமறைவான சம்பத்தையும் கைது செய்தால்தான் 2 பேரது உடலையும் வாங்குவோம் என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், தலைமறைவான சம்பத்தை விரைவில் கைது செய்வோம் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து உறவினர்கள், நாளை(அதாவது இன்று) 2 பேரது உடலையும் வாங்கிக்கொள்வதாக கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொண்டு இதுபோன்ற சோக சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் எனவும், கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story