நன்செய் இடையாற்றில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு


நன்செய் இடையாற்றில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 23 Nov 2020 9:46 AM IST (Updated: 23 Nov 2020 9:46 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாற்றில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய்இடையாறு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் ஜல் ஜீவன் இயக்க திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.8.59 கோடி மதிப்பீட்டில் 18 ஊராட்சிகளுக்குட்பட்ட 82 குக்கிராமங்களில் ஜல் ஜீவன் இயக்கத் திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 766 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தேர்வு செய்யப்பட்ட குக்கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஒரே சீரான அழுத்தத்தில் குடிநீர் செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கிராமத்தின் உயரம் குறைவான தெரு, உயரம் அதிகமான தெரு உள்ளிட்ட எந்த பகுதியில் வசித்தாலும் அனைத்து வீடுகளுக்கும் ஒரே சீரான குடிநீர் கிடைக்கும். ஜல் ஜீவன் இயக்கத் திட்டத்தின் கீழ் நன்செய் இடையாறு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் வீடுகளுக்கு குடிநீர் சீரான அழுத்தத்தில் கிடைக்க திட்ட வழிகாட்டுதலின்படி வால்வுகள் மற்றும் குழாய்கள் பயன்படுத்தப்படுகிறதா? குடிநீர் குழாய்கள் சரியான முறையில் பதிக்கப்பட்டு வருகிறதா? மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் சீரான அழுத்தத்தில் குடிநீர் வழங்க தேவையான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளில் குடிநீர் சரியாக வருகிறதா? என கலெக்டர் நேரில் பார்வையிட்டு உறுதி செய்தார்.

ஆய்வின்போது மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணாளன், முனியப்பன், நன்செய் இடையாறு ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் மற்றும் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story