கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளின் கரிம பூச்சு 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது - தொல்லியல் துறை துணை இயக்குனர் தகவல்
கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளின் கரிம பூச்சு 2,600 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை துணை இயக்குனர் தகவல் தெரிவித்து உள்ளார்.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கீழடி. இங்கு மத்திய, மாநில அரசுகளின் சார்பில் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றது. முதலில் மத்திய அரசின் சார்பில் 2 கட்டங்களும், மாநில அரசின் சார்பில் 4 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளும் நடைபெற்றன.
இந்த ஆராய்ச்சியின் போது முதுமக்கள் தாழிகள், மனித எலும்பு கூடுகள், குழந்தையின் முழு உருவ எலும்பு கூடுகள், பவளங்கள், பாசி மணிகள், சுடுமண் உலைகள், சங்கு வளையல்கள், செங்கல் கட்டிட சுவர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இதில் கடைசியாக நடைபெற்ற 6-வது கட்ட அகழ்வாராய்ச்சியின்போது உருளை வடிவ பானைகள், உலைகள், விலங்கின எலும்பு கூடுகள், இரும்பு பொருட்கள், எடை கற்கள், முத்திரைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர க, ய என்ற தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டன. இதிலிருந்த ஒரு குறிப்பிட்ட பானை ஓடுகளில் இருந்த கருப்பு நிறம் பூசப்பட்ட பானையானது தொல்லியல் துறையினர் மற்றும் வேதியியல் துறையினரின் கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிதி உதவியுடன் 9 பேர் கொண்ட ஆராய்ச்சி குழுவினர் இந்த பானையை ஆராய்ச்சி நடத்தி உள்ளனர். இந்த பானை ஓடுகளின் உட்புறத்தில் பூசப்பட்ட கரிம பூச்சானது ‘கார்பன் நானோ டியூப்‘ என அழைக்கப்படும் கரிம நுண் சுருள் வடிவில் இருந்துள்ளது. பொதுவாக கரிம நுண் சுருளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மிகவும் கடினமாகவும், வலுவான தன்மையும் கொண்டது.
இதன் உருவம் தலை முடியை விட தடிமன் குறைந்த அளவாக இருந்தாலும் கூட அவை இரும்பின் தன்மையை விட பலம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது உள்ள நவீன காலத்தில் கூட இந்த நுண் கரிம சுருள்கள் கொண்டு மின் சாதன பொருட்கள், வெப்ப கடத்திகள், நீர் மற்றும் காற்று சுத்திகரிப்பான்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கீழடி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளின் உட்புறத்தில் தென்பட்ட இந்த கரிம பூச்சானது ராமன் ஸ்பெக்ட்ராஸ் ஸ்கோர்பி, டிரான்ஸ்மிஷன், எலக்ட்ரான் மைக்ரோ ஸ்கோர்பி மற்றும் எக்ஸ்ரே, போட்டோ எலக்ட்ரான் ஆகியவை கொண்டு ஆய்வு செய்து பார்க்கப்பட்டது. அப்போது அந்த பூச்சானது நுண் கரிம சுருள் வடிவில் இருப்பது தெரிய வருகிறது. மேலும் இந்த பொருட்கள் கி.மு. 6-வது நூற்றாண்டில் பயன்படுத்தியதாக இருக்க கூடும் என தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.
இதுகுறித்து தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் கூறியதாவது;-
கீழடி பகுதியில் இறுதியாக நடைபெற்ற ஆய்வின் போது கிடைத்த பானை ஓடுகளில் இருந்த கரிம பூச்சை ஆய்வு செய்த போது பண்டைய தமிழர்கள் இந்த பொருட்களை பயன்படுத்தியது தெரிய வருகிறது. பொதுவாக ஒரு பொருளை திடமாகவும், எடை குறைந்தாகவும் தயாரிக்க பயன்படுத்துவது நுண் கரிம சுருள் ஆகும்.
எனவே இந்த நுண் கரிம சுருளை கடந்த 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்தி இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. பல்வேறு தட்ப, வெட்ப நிலைகளை எதிர்கொண்டிருந்த பானைகள் 2,600 ஆண்டுகள் கழித்த பின்னரும் தற்போது போல் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கரிம பூச்சுகள் எந்த பொருட்களை கொண்டு பண்டைய தமிழர்கள் தயாரித்திருப்பார்கள் என்பதை கண்டறிய முடியவில்லை.
இருப்பினும் அதில் உள்ள கார்பனில் கார்பாக்சில், ஆல்கஹால் ஆகியவை இருப்பதன் மூலம் ஒருவேளை இந்த பூச்சானது தாவரங்களை கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலக அளவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது இதுவரை கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களில் நுண் கரிம அமைப்புகள் பல பொருட்களில் காணப்பட்டாலும் கீழடியில் கிடைத்த பானை ஓடுகளே மிக பழமையானதாக இருக்க கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தமிழகத்தில் கீழடி, கொடுமணல், ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதியில் கிடைத்த பொருட்களை மேலும் ஆய்வு செய்வதன் மூலம் பண்டைய தமிழர்களின் அறிவியல் அறிவு குறித்து இன்னும் அரிய தகவல்கள் கிடைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story