வேலூரில் துணிகரம்: பிரபல பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் ரூ.1 கோடி நகை கொள்ளை சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நேரத்தில் மர்மநபர்கள் கைவரிசை


வேலூரில் துணிகரம்: பிரபல பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் ரூ.1 கோடி நகை கொள்ளை சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நேரத்தில் மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 23 Nov 2020 5:46 AM GMT (Updated: 23 Nov 2020 5:46 AM GMT)

வேலூரில் பிரபல பிரியாணி கடை உரிமையாளர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ.1 கோடி மதிப்பிலான நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

வேலூர், 

வேலூர் கொசப்பேட்டை அசோகநடேசன் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 60). இவர் வேலூர் பழைய பஸ்நிலைய பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். மோகனுக்கு கடந்த 14-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து அவரை குடும்பத்தினர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு செய்யப்பட்ட பல்வேறு பரிசோதனைகளில் முதுகு தண்டுவடத்தில் பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. அதற்கான அறுவை சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அதே மருத்துவமனையில் மோகன் அனுமதிக்கப்பட்டார். அவரின் உதவிக்காக குடும்பத்தினரும் சென்னையில் தங்கினர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து மோகன் மகன் ஹரீஸ் (20) நேற்று இரவு 7 மணியளவில் வேலூருக்கு திரும்பினார். வீட்டிற்கு சென்ற அவர் அறைகளில் ஆங்காங்கே பொருட்கள், துணிகள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 250 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் கொள்ளை போயிருந்தது. பின்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்த மர்மநபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஹரீஸ் உடனடியாக தனது குடும்பத்தினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு, ஹரீஸ் மற்றும் அந்த பகுதியில் வசிப்பர்களிடம் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வீட்டின் கதவு, பீரோ உள்ளிட்ட பகுதிகளில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் விரல்ரேகைகளை சேகரித்தனர். போலீஸ் மோப்பநாய் சன்னி அங்கு வரவழைக்கப்பட்டது.

போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய முற்பட்டனர். அப்போது ஒரு கண்காணிப்பு கேமரா வயர் துண்டிக்கப்பட்டும், மற்றொரு கேமராவை வேறு திசைக்கு திருப்பி வைக்கப்பட்டும் இருந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 19-ந் தேதி கண்காணிப்பு கேமராக்கள் துண்டிக்கப்பட்டு ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த மற்ற கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ஒரு கண்காணிப்பு கேமராவில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரின் உருவங்கள் பதிவாகியிருந்தன.

கொள்ளை நடந்த வீட்டை வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி அங்கு வந்து பார்வையிட்டார். பின்னர் கொள்ளை போன நகைகள், பணம் குறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு ஆகியோர் மேற்பார்வையில் 3 தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். தகவலறிந்த வேலூர் எம்.எல்.ஏ. ப.கார்த்திகேயன் அங்கு வந்து ஹரீஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலூரில் பிரபல பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story