‘லவ் ஜிகாத்’ சட்டம் மராட்டியத்தில் இயற்றப்படுமா? சஞ்சய் ராவத் பதில்


‘லவ் ஜிகாத்’ சட்டம் மராட்டியத்தில் இயற்றப்படுமா? சஞ்சய் ராவத் பதில்
x
தினத்தந்தி 23 Nov 2020 8:58 PM GMT (Updated: 23 Nov 2020 8:58 PM GMT)

மராட்டியத்தில் ‘லவ் ஜிகாத்’ சட்டம் எப்போது இயற்றப்படும் என்ற கேள்விக்கு சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் நேற்று பதிலளித்தார்.

மும்பை, 

‘லவ் ஜிகாத்‘ என்ற பெயரில் இந்து பெண்கள் திருமணத்தின் மூலம் மதம் மாற்றப்படுவதாக பாரதீய ஜனதா தலைவர்கள் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி புரியும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் அரியானா போன்ற மாநிலங்கள் ‘லவ் ஜிகாத்‘திற்கு எதிராக சட்டம் இயற்ற முடிவு செய்து உள்ளன.

இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில், “நாட்டில் ‘லவ் ஜிகாத்’ சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இதை தடுக்க சட்டம் இயற்றுவது நியாயமான ஒன்றுதான்“ என்று கூறினார்.

இந்த நிலையில் சிவசேனா கட்சி மூத்த தலைவரும், எம்.பி. யுமான சஞ்சய் ராவத் இதுகுறித்த நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-

நாட்டின் பிரச்சினைகள்

மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாரதீய ஜனதா இந்த பிரச்சினையை கையில் எடுக்கும் என நினைக்கிறேன்.

‘லவ் ஜிகாத்‘த்துக்கு எதிரான சட்டம் மராட்டியத்தில் எப்போது இயற்றப்படும் என முக்கிய பாரதீய ஜனதா தலைவர்கள் என்னிடம் கேட்கின்றனர். நான் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயிடம் காலையில் இதுகுறித்து பேசினேன்.

ஒருவேளை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் இந்த சட்டத்தை கொண்டுவந்தால், அதை நாங்கள் முழுமையாக படித்து ஆராயந்துவிட்டு, அதன்பிறகு மராட்டியத்தில் கொண்டுவருவது பற்றி சிந்திப்போம்.

பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை நாட்டில் தற்போது நிலவும் முக்கியமான பிரச்சினைகள், ஆனால் சிலர் ‘லவ் ஜிகாத்‘ பிரச்சினை தான் முக்கியம் என நினைத்தால் அதற்காக கொடி பிடிக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story