பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கு வினய் குல்கர்னிக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு


பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கு வினய் குல்கர்னிக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 23 Nov 2020 9:54 PM GMT (Updated: 23 Nov 2020 9:54 PM GMT)

பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் முன்னாள் மந்திரி வினய் குல்கர்னிக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து தார்வார் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

உப்பள்ளி,

தார்வார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தவர் யோகேஷ் கவுடா. பா.ஜனதா பிரமுகரான இவருக்கும், காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரியான வினய் குல்கர்னிக்கும் அரசியல் தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 15-ந்தேதி உப்பள்ளி உபநகரில் உள்ள தனது உடற்பயிற்சி கூடத்தில் யோகேஷ் கவுடா இருந்தார். அப்போது அங்கு புகுந்த மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்டிக்கொலை செய்தனர். அதாவது அரசியல் முன்விரோதத்தில் வினய்குல்கர்னியும், அவரது சகோதரர் விஜய் குல்கர்னியும் கூலிப்படையை ஏவி யோகேஷ் கவுடாவை கொன்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் அடிப்படையில் கொலைக்கான ஆதாரங்களை அழித்ததாகவும், சாட்சிகளை கலைத்ததாகவும் வினய் குல்கர்னி, விஜய் குல்கர்னி ஆகியோர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அவர்கள் இருவருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி கடந்த 5-ந்தேதி ஆஜரான வினய் குல்கர்னி, விஜய் குல்கர்னி ஆகியோரை 9 மணி நேர விசாரணைக்கு பிறகு சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 3 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் பெலகாவியில் உள்ள இன்டல்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்றுடன் நீதிமன்ற காவல் நிறைவடைந்தது. இதனால் வினய் குல்கர்னி, விஜய் குல்கர்னி ஆகியோரை போலீசார் காணொலி காட்சி மூலம் தார்வார் மாவட்ட 2-வது சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல், யோகேஷ் கவுடா கொலை வழக்கில் வினய் குல்கர்னி, விஜய் குல்கர்னி ஆகியோருக்கு நேரடி தொடர்பு உள்ளது. அவர்கள் தான் கூலிப்படையை ஏவி யோகேஷ் கவுடாவை கொலை செய்துள்ளனர்.

மேலும் கொலைக்கான சாட்சிகள், ஆதாரங்களை அவர்கள் அழித்துள்ளனர். இதுதொடர்பாக 20-க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. இதுதொடர்பாக இன்னும் விசாரணை நடத்த வேண்டியதுள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்றும், நீதிமன்ற காவலில் அவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு வினய்குல்கர்னி தரப்பில் ஆஜரான வக்கீல் ஆட்சேபனை தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் நீதிபதி, வினய் குல்கர்னி, விஜய் குல்கர்னி ஆகியோரின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டார். இதைதொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நீதிமன்ற காவலில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பா.ஜனதா பிரமுகர் வீட்டில் சோதனை

இதற்கிடையே யோகேஷ் கவுடா கொலை செய்யப்படவில்லை என்றும், அவர் இயற்கையான முறையில் மரணம் அடைந்ததாக பா.ஜனதா பிரமுகரான முதுகப்பா என்கிற மகாதேவப்பா கூறியிருந்தார். இதனால் இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஏதாவது ஆதாரங்கள் சிக்கும் என கருதினர். இதனால் தார்வார் புறநகர் கோவண கொப்பா கிராமத்தில் உள்ள முதுகப்பா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை மதியம் வரை நீடித்தது. பின்னர் முதுகப்பாவை சி.பி.ஐ. அதிகாரிகள் உப்பள்ளி உபநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, யோகேஷ் கவுடா சாவு, இயற்கையானது என்று எப்படி கூறுனீர்கள். இந்த கொலைக்கும், உங்களுக்கும் தொடர்பு உள்ளதா என சி.பி.ஐ. அதிகாரிகள், முதுகப்பாவிடம் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக்கொண்டனர். பின்னர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராகும்படி கூறி அவரை விடுவித்தனர். பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில், மற்றொரு பா.ஜனதா பிரமுகரை சி.பி.ஐ. அதிகாரிகள் அழைத்து விசாரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story