வருவாய்த்துறை சார்பில் புயலை எதிர்கொள்வது குறித்த அவசர ஆலோசனை கூட்டம் கடலோர பகுதியில் கலெக்டர் ஆய்வு


வருவாய்த்துறை சார்பில் புயலை எதிர்கொள்வது குறித்த அவசர ஆலோசனை கூட்டம் கடலோர பகுதியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 24 Nov 2020 3:57 AM IST (Updated: 24 Nov 2020 3:57 AM IST)
t-max-icont-min-icon

வானூர் வருவாய் துறை சார்பில் புயலை எதிர்கொள்வது குறித்த அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

வானூர்,

வங்க கடலில் ஏற்பட்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக உருவாகிறது. இதற்கு ‘நிவர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் மாமல்லபுரம்-காரைக்கால் இடையே நாளை (புதன்கிழமை) கரையை கடக்கிறது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருவாய்த்துறை சார்பில் ‘நிவர்’புயலை எதிர் கொள்வது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வானூர் வட்டாட்சியர் சங்கரலிங்கம் தலைமை தாங்கினார். சமூகப்பாதுகாப்பு தனி வட்டாட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார்.

பாதுகாப்பு நடவடிக்கை

கூட்டத்தில் வட்டாட்சியர் சங்கரலிங்கம் பேசுகையில், கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே தங்கி இருக்க வேண்டும்.புயல் பாதிப்பு அதிகம் ஏற்பட்டால் பொது மக்களை அங்குள்ள அரசு பள்ளிகளில் தங்கவைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இங்குள்ள 3 பேரிடர் மேலாண்மை கட்டிடங்களிலும் பொதுமக்களுக்கு தேவையானவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மீனவர்களை மேடான பகுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்க வேண்டும்.மண்டல அலுவலர்கள், தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைவரும் தங்களது தலைமை இடத்திலேயே 5 நாட்கள் இருக்க வேண்டும். ‘நிவர்’ புயல் சம்பந்தமாக அனைத்து நிகழ்வுகள் பற்றிய விவரங்களை உடனுக்குடன் கலெக்டர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடபதி, மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கடற்கரை கிராமங்களான நடுக்குப்பம் சின்ன முதலியார் சாவடி பெரிய முதலியார் சாவடி தந்திராயன் குப்பம் பொம்மையார்பாளையம் பிள்ளைச்சாவடி உட்பட பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளது. புயல் எச்சரிக்கையை யொட்டி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேற்று இரவு தந்திராயன் குப்பம் கடற்கரையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது;-

மீனவர்கள் தங்களது படகுகளை மேடான பகுதிகளில் நிறுத்தி வைக்க வேண்டும்.இன்று(செவ்வாய்க்கிழமை) காலை முதல் கடற்கரையில் பொதுமக்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story