பாதுகாப்பு மையங்கள், கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு: தொழிற்சாலைகள், கடைகளை மூட உத்தரவு ‘நிவர்’ புயலை சந்திக்க அரசு தயார்


பாதுகாப்பு மையங்கள், கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு: தொழிற்சாலைகள், கடைகளை மூட உத்தரவு ‘நிவர்’ புயலை சந்திக்க அரசு தயார்
x
தினத்தந்தி 24 Nov 2020 4:01 AM IST (Updated: 24 Nov 2020 4:01 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு மையங்கள், கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு ‘நிவர்’ புயலை சந்திக்கும் வகையில் அரசு துறைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி, 

வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து இருக்கிறது.

பேரிடர் மீட்பு குழு வருகை

கடந்த 21-ந் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது தீவிர புயலாக மாறி நாளை (புதன்கிழமை) பிற்பகலில் மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘நிவர்’ என பெயரிடப்பட்ட இந்த புயலால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்தநிலையில் புதுவை கடல் நேற்று வழக்கத்துக்கு மாறாக கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதையடுத்து 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீன்பிடிக்கச் சென்றவர்கள் எல்லாம் கரைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனால் படகுகள், விசைப்படகுகள் அனைத்தும் கரையில் அணிவகுத்து நிற்கின்றன.

புயல் 110 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என்பதால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு வகையில் தயாராகி வருகிறது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்தவகையில் மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து 36 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் நேற்று இரவு புதுவைக்கு வந்தனர்.

ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில் புயல் சேத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில பேரிடர் மீட்பு துறை மூலம் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. புதுவை லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாநில பேரிடர் தடுப்பு செயல் விளக்க மையத்தில் நடந்த இந்த கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

இதில் அமைச்சர் ஷாஜகான், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, அரசு செயலர்கள் பூர்வா கார்க், மாவட்ட கலெக்டர் அருண், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா மற்றும் பொதுப்பணி, உள்ளாட்சி, மின்சாரம், கடலோர காவல்படை, தீயணைப்பு, துறைமுகம் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து புயலை எதிர்கொள்ள அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில பேரிடர் மீட்பு துறை மூலம் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

கடந்த 15 நாட்களுக்கு முன்னதாகவே பருவமழையை எதிர்கொள்வது குறித்து ஒரு கூட்டம் நடத்தி அனைத்து துறைகளும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி அமைச்சர்கள் தலைமையிலும் துறை வாரியாக கூட்டம் நடத்தி விழிப்புடன் இருக்க உத்தரவிடப்பட்டது.

நாளை மறுநாள் (நாளை புதன்கிழமை) காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் ‘நிவர்’ புயல் சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதன்படி மீட்பு மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்துப் பேசி உள்ளோம்.

குடிநீர், மின்சாரம்

அதன்படி புதுவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் துறை வாரியாக கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லாத மரங்களை அகற்றவும், பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மின்துறையினர் மின்கம்பங்கள் பலமாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்துறையுடன் பொதுப்பணித்துறை, வனத்துறையினர் இந்த பணியில் இணைந்து செயல்படுவார்கள்.

மின்தடை ஏற்பட்டால் 12 மணி நேரத்தில் சரி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்தடை காரணமாக குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு கேட்டுக்கொண்டதன்படி கடலுக்குச் சென்ற 99 சதவீத மீனவர்கள் கரை திரும்பி வந்துவிட்டனர். ஒரு படகு மட்டும் கரை திரும்பவில்லை. காரைக்காலில் 90 படகுகள் திரும்பி வர வேண்டியுள்ளது. அவர்கள் அனைவரும் திரும்பி வர கடலோர காவல்படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அனைத்து பகுதிகளிலும் படகை பாதுகாப்பாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் மூடப்படும்

புயல், மழையால் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் மருந்துகள் இருப்பு வைக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் மோட்டார் என்ஜின் மூலம் அகற்றப்படும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்கள், பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்படுவார்கள். அரசு சார்பில் அவர்களுக்கு உணவு வழங்கப்படும். இதற்காக புதுச்சேரியில் மட்டும் 84 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாளை (இன்று செவ்வாய்க்கிழமை) மாலை முதல் நாளை மறுநாள் (நாளை புதன்கிழமை) வரை உயிர் சேதத்தை தடுக்க தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த நாட்களில் தொழிற்சாலைகள், கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களும் பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களப்பணியில் அமைச்சர்கள்

‘நிவர்’ புயலை எதிர்கொள்ள புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு துறைகளும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நானும், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான் ஆகியோரும், காரைக்காலில் அமைச்சர் கமலக்கண்ணனும், ஏனாமில் மல்லாடி கிருஷ்ணாராவும் களப்பணியில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

காரைக்கால்

புயல் குறித்து காரைக் கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அர்ஜூன் சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட், துணை கலெக்டர் பாஸ்கரன் மற்றும் அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் கமலக்கண்ணன், புயலை எதிர்கொள்ள காரைக்கால் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாகவும், 40 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு இன்று (செவ்வாய்க்கிழமை) காரைக்கால் வர இருப்பதாகவும் தெரிவித்தார்.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

* வங்க கடலில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பெரும் மழையும், புயலும் வீச இருப்பதால், மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* பொது மக்கள் ஆதார், கல்வி சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* அத்தியாவசிய பொருட்களான பேட்டரியில் இயக்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

* மின் கம்பிகள், தெரு விளக்கு கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றிற்கு மிக அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், வீடுகளில் மின்சாதன பொருட்களை கவனமாக கையாள அறிவுறுத்தப்படுகின்றனர்.

* பலத்த காற்று வீசும் போது பொருட்கள் நகரவும், மரங்கள் விழவும் வாய்ப்புள்ளதால் அச்சமயங்களில் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.

ரெயில்கள் ரத்து

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நிவர் புயலை முன்னிட்டு கீழ்க்கண்ட ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை-தஞ்சாவூர்-சென்னை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06865/ 06866) இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை (புதன்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் சென்னை-திருச்சி-சென்னை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06795/ 06796) நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* மைசூரு-மயிலாடுதுறை சிறப்பு ரெயில் (06232) திருச்சி-மயிலாடுதுறை இடையேயும், எர்ணாகுளம்-காரைக்கால் சிறப்பு ரெயில் (06188), திருச்சி-காரைக்கால் இடையேயும், புவனேஸ்வர்-புதுச்சேரி சிறப்பு ரெயில் (02898), சென்னை எழும்பூர்-புதுச்சேரி இடையேயும் இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* மயிலாடுதுறை-மைசூரு சிறப்பு ரெயில் (06231), மயிலாடுதுறை-திருச்சி இடையேயும், காரைக்கால்-எர்ணாகுளம் சிறப்பு ரெயில் (06187), காரைக்கால்-திருச்சி இடையேயும், கோவை-மைலாடுதுறை ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் (02084), திருச்சி-மைலாடுதுறை இடையேயும், மயிலாடுதுறை-கோவை ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் (02083), மயிலாடுதுறை-திருச்சி இடையேயும், புதுச்சேரி-புவனேஸ்வர் சிறப்பு ரெயில் (02897), புதுச்சேரி-சென்னை எழும்பூர் இடையேயும், புதுச்சேரி-ஹவுரா அதிவேக சிறப்பு ரெயில் (02868), புதுச்சேரி-விழுப்புரம் இடையேயும் நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு தொகை திருப்பி அளிக்கப்படும். டிக்கெட் கவுண்ட்டர்களில் முன்பதிவு செய்தவர்கள், 15 நாட்களுக்குள் டிக்கெட் கவுண்ட்டர்களில் முழு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story