நடத்தையில் சந்தேகம்: மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற ஓட்டல் உரிமையாளர் கைது
நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த காசவளநாடு புதூர் தெக்கூர் மேலத்தெருவை சேர்ந்தவர் வில்லப்பன்(வயது 53). இவர், அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி இளஞ்சியம்(45). இவர்களுக்கு வெற்றிச்செல்வி, தமிழரசி ஆகிய 2 மகள்களும், தமிழரசன் என்ற மகனும் உள்ளனர்.
2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. வெற்றிச்செல்வி பஞ்சநதிக்கோட்டையிலும், தமிழரசி ஓசூரிலும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தமிழரசன், சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இளஞ்சியமும், வில்லப்பனும் காசவளநாடு புதூர் தெக்கூரில் வசித்து வந்த நிலையில் மனைவியின் நடத்தையில் வில்லப்பனுக்கு சந்தேகம் இருந்து வந்தது.
இது தொடர்பாக அவர், மனைவியிடம் கேட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதேபோல் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது.
அப்போது ஆத்திரம் அடைந்த வில்லப்பன், அருகில் கிடந்த விறகு கட்டையை எடுத்து இளஞ்சியத்தின் தலையில் அடித்தார். இதில் படுகாயம் அடைந்த இளஞ்சியம், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மனைவி இறந்து விட்டதை அறிந்த வில்லப்பன் வீட்டை விட்டு வெளியே வந்து தான் போலீஸ் நிலையத்திற்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.
இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள், வில்லப்பன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கே இளஞ்சியம் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதால் இந்த கொலை நடந்தது என்பது தெரிய வந்தது.
இந்த கொலை குறித்து இளஞ்சியம் மகள் வெற்றிச்செல்வி தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வில்லப்பனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story