தஞ்சையில், நிதி நிறுவன அதிபர் வீட்டில் 76 பவுன் நகைகள்- 1¾ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை
தஞ்சையில், நிதி நிறுவன அதிபர் வீட்டில் 76 பவுன் நகைகள் மற்றும் 1¾ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை-புதுக்கோட்டை சாலை சுந்தரம் நகரை சேர்ந்தவர் சபாரத்தினம்(வயது 32). இவர், தஞ்சை பகுதியில் தனது அக்காள் கணவர் வைத்திலிங்கத்துடன் இணைந்து அடகு கடை வைத்துள்ளதுடன், நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் வைத்திலிங்கம் உடல் நலக்குறைவு காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவர் கடந்த மாதம் இறந்ததால் அவரது இறுதிச்சடங்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடந்தது. இதில் பங்கேற்க சபாரத்தினம் தனது மனைவி மேகலா மற்றும் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு பொன்னமராவதிக்கு சென்றார். கடந்த 10-ந் தேதி தஞ்சைக்கு வந்த இவர்கள், துணிமணிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் பொன்னமராவதிக்கு சென்று விட்டனர்.
நேற்று முன்தினம் மேகலா தனது கணவருடன் தஞ்சைக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோக்களும் திறந்து கிடந்தன. அதில் இருந்த பொருட்கள், துணிமணிகள் எல்லாம் சிதறி கிடந்தன.
பீரோக்களில் இருந்த நகை, வெள்ளிப்பொருட்கள் இருக்கிறதா? என அவர்கள் தேடிப்பார்த்தபோது அவற்றை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோக்களில் இருந்த 76 பவுன் நகைகள் மற்றும் 1¾ கிலோ வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது.
இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் ‘சசி’ அங்கு வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு வந்த அவர்கள் வீட்டின் கதவு, பீரோக்கள், சுவர்களில் பதிவான ரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில், மேகலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை போன நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.27 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
நிதி நிறுவன அதிபர் வீட்டின் கதவை உடைத்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும், வெள்ளி பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story