மேற்குவங்க மாநில வாலிபருடன் காதல் திருமணம்: சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்த வங்கதேச பெண் கைது


மேற்குவங்க மாநில வாலிபருடன் காதல் திருமணம்: சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்த வங்கதேச பெண் கைது
x
தினத்தந்தி 23 Nov 2020 11:26 PM GMT (Updated: 23 Nov 2020 11:26 PM GMT)

மேற்குவங்க மாநில வாலிபருடன் காதல் திருமணம் செய்து கொள்வதற்காக, சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேச நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.

மீஞ்சூர், 

மேற்குவங்க மாநிலத்தில் வசித்து வந்தவர் ஷாஷிஷேக் (வயது 28). இவருக்கு முகநூல் மூலமாக வங்கதேச நாட்டை சேர்ந்த பப்பியாகோஸ் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதில், நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் பப்பியாகோஸ் பாஸ்போர்ட் இல்லாமல் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் உள்ள மேற்குவங்க மாநிலத்தில் நுழைந்துள்ளார்.

இந்தநிலையில் இவர்கள் இருவரும் தமிழகம் வந்து, கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் மீஞ்சூர் அடுத்த பத்மாவதி நகரில் வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். ஷாஷிஷேக் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தன் மகளை காணவில்லை என்று வங்கதேச நாட்டிலுள்ள போலீசில் பெண்ணின் தந்தை புகார் செய்திருந்தார்.

வங்கதேச பெண் கைது

இதனையடுத்து அப்பெண் மீஞ்சூரில் அருகே வசித்து வருவதாக காஞ்சீபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் காஞ்சீபுரம் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை போலீசார், பத்மாவதி நகருக்கு வந்து பப்பியாகோசை கைது செய்தனர். பின்னர் மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து வங்கதேச பெண்ணை ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். பாஸ்போர்ட் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பெண்ணை கைது செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story