களக்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த கரடி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி மீட்டனர்


களக்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த கரடி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி மீட்டனர்
x
தினத்தந்தி 24 Nov 2020 5:32 AM IST (Updated: 24 Nov 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த கரடியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி மீட்டனர்.

களக்காடு, 

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, கரடி, மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள விளைநிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்து விடுகின்றன. இதேபோன்று மலைப்பகுதியில் இருந்து இறங்கிய வனவிலங்குகள் அருகில் உள்ள சிறிய மலைக்குன்றுகளான பொத்தை பகுதியிலும் உள்ளன.

இந்த நிலையில் களக்காடு அருகே சிங்கிகுளம் கிராமத்தில் உள்ள பொத்தை பகுதியில் கரடிகள் நடமாட்டம் இருந்தன.

இவை அங்குள்ள பனம்பழம் உள்ளிட்ட பழங்களை விரும்பி சாப்பிட்டு வந்தன. நேற்று அதிகாலையில் சிங்கிகுளம் கால்பரவு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 2 கரடிகள் சுற்றி திரிந்தன. அவற்றில் ஆண் கரடியானது அங்குள்ள தரைமட்ட கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.

சுமார் 15 அடி ஆழமுள்ள கிணற்றில் கிடந்த தண்ணீரில் கரடி தத்தளித்தது. உடனே மற்றொரு கரடி பொத்தை பகுதிக்கு ஓடி விட்டது.

மயக்க மருந்து ஊசி செலுத்தி...

இதனைப் பார்த்த விவசாயிகள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனத்துறை துணை இயக்குனர் இளங்கோ, வனச்சரகர் பாலாஜி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று, கிணற்றில் தத்தளித்த கரடியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக கரடிக்கு துப்பாக்கி மூலம் மயக்க மருந்து ஊசி செலுத்தி, இரும்பு கூண்டு மூலம் வெளியே கொண்டு வர ஏற்பாடு செய்தனர். அதன்படி கால்நடை மருத்துவர் துப்பாக்கி மூலம் கரடிக்கு மயக்க மருந்து ஊசி செலுத்தினார். பின்னர் கிணற்றுக்குள் இரும்பு கூண்டு இறக்கப்பட்டது. தொடர்ந்து கிணற்றை சுற்றிலும் வலைவிரித்து கரடியை பிடிக்க வனத்துறையினர் தயாராக இருந்தனர்.

வனப்பகுதியில் விடப்பட்டது

அப்போது கிணற்றில் இருந்த கரடி திடீரென்று இரும்புகூண்டின் மீது தாவி ஏறி, அங்கிருந்து கிணற்றுக்கு வெளியே வலையில் சிக்காமல் குதித்து ஓடியது. இதனால் அங்கு நின்ற வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர். அங்கிருந்து ஓட்டம் பிடித்த கரடி சிறிதுதூரத்தில் இருந்த பச்சையாறு புதர் பகுதியில் பதுங்கியது. பின்னர் அது சிறிதுநேரத்தில் மயங்கியது. இதையடுத்து வனத்துறையினர் அந்த கரடியை பிடித்து சென்று, அதற்கு சிகிச்சை அளித்து செங்கல்தேரி வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிங்கிகுளத்தில் ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க சென்ற வனத்துறை ஊழியர் உள்பட 2 பேரை அது கடித்து குதறியது குறிப்பிடத்தக்கது. எனவே, சிங்கிகுளம் பகுதியில் சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து சென்று வனப்பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story