கஜா புயலில் இருந்து மீளாத நிலையில், அதி கனமழை அறிவிப்பு எதிரொலி; அச்சத்தில் விவசாயிகள் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
கஜாபுயலில் இருந்து மீளாத நிலையில் அதிகனமழை அறிவிப்பு எதிரொலியாக அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். அதேநேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வடகாடு,
வங்க கடலில் உருவான ‘நிவர்’ புயல் நாளை (புதன்கிழமை) காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த மழையால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜாபுயலில் இருந்து மீளாத இந்த மாவட்ட மக்கள் தற்போது, உருவான ‘நிவர்’ புயலால் என்னசெய்வது என்று தெரியாமல் உள்ளனர். கஜாபுயலால் அதிகப்படியான அளவில் சேதமடைந்து, அனைத்தையும் இழந்து நின்றதை புதுக்கோட்டை மாவட்ட மக்கள் இன்றளவும் மறக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் கொரோனா பொது முடக்கத்தால் முடங்கி இருந்து வரும் நிலையில் தற்போது, மீண்டும் அதிகனமழை அறிவிப்பு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கஜா புயலின் போது சேதமடைந்த தங்களது வீடுகள் கூட இன்னும் அதே நிலையில் உள்ளதாக கூறும், வடகாடு பகுதி மக்கள் தங்களது வீடுகளில் தார்ப்பாய்களை கொண்டு மூடி வைத்துள்ளனர். அந்த தார்ப்பாய்கூட மாற்ற போதிய வசதி இல்லை என்றும் இப்பகுதி மக்கள் வருத்தமுடன் கூறுகின்றனர். தற்போது, வடகாடு பகுதியில் நெல், மிளகாய், கத்தரி, பூ சாகுபடி உள்ளிட்ட விவசாய பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகனமழையால் இந்த பயிர்கள் சேதம்அடைந்து விடுமே என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.
இதனிடையே வடகாடு பகுதிக மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நைலான் கயிறு மற்றும் தார்ப்பாய்களை வாங்கியுள்ளனர். வீடுகளில் போர்த்தி கயிறு மூலமாக இணைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் அதிகனமழையில் இருந்து பாதுகாக்க விவசாயிகள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
கீரமங்கலம், செரியலூர், நகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் நிற்கும் தேக்கு உள்ளிட்ட மரங்களில் உள்ள கிளைகளை அகற்றி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறும் போது, கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயலின்போது, முன் எச்சரிக்கை இல்லாமல் இருந்ததால் ஒட்டு மொத்தமாக தென்னை, தேக்கு, சந்தனம், மா, பலா, வாழை என ஏராளமான மரங்களை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம். கஜா புயலில் தப்பி நிற்கும் மரங்களையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தேக்கு உள்ளிட்ட மரங்களின் கிளைகளை அகற்றி வருகிறோம் என்றனர்.
Related Tags :
Next Story