மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 500 கனஅடியாக குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்,
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசன தேவைக்கேற்றவாறு குறைத்தோ அல்லது அதிகரித்தோ திறக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று மதியம் முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 97.82 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9,478 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று அணையின் நீர்மட்டம் 98.20 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 464 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் தீவிரம் அடையும் மழை, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்தால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்தானது மேலும் அதிகரிக்குமானால் இந்த ஆண்டில் 4-வது முறையாக அணை நீர்மட்டம் 100 அடியை எட்ட வாய்ப்புள்ளது. இந்த ஆண்டில் ஏற்கனவே அணை நீர்மட்டம் 3 முறை 100 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story