கடலூர் முதுநகரில், குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர் முதுநகரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் 36-வது வார்டில் குடிநீர் தங்கு தடையின்றி வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே மின்விளக்குகளை எரிய வைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
அதன்படி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சரளா, மாநிலக்குழு மாதவன், மாவட்ட செயற்குழு சுப்புராயன், நகர செயலாளர் அமர்நாத், நகர்க்குழு தமிழ்மணி, கிளை செயலாளர் பாபு மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செல்லங்குப்பம் மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது 36-வது வார்டில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் மற்றும் நகராட்சி உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டதால் ஆர்ப்பாட்டத்தை விட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story