கோவையில் ஆபத்தான கட்டிடங்களை ஆய்வு செய்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் - 19 கடைகளுக்கு ‘சீல்’


கோவையில் ஆபத்தான கட்டிடங்களை ஆய்வு செய்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் - 19 கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 23 Nov 2020 10:00 PM GMT (Updated: 24 Nov 2020 3:41 AM GMT)

கோவையில் ஆபத்தான கட்டிடங்களை ஆய்வு செய்தபோது அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

கோவையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து இடித்து அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார். இதைடுத்து ஆபத்தான கட்டிடங்கள் கண்டறியப்பட்டு சில தனியார் கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. சில கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

இந்த நிலையில், கோவை மாநகராட்சிஎல்லைக்குட்பட்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை 20-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்றும், இல்லை என்றால் மறுநாள் அந்த கட்டிடங்கள் சீல் வைக்கப்படும் என்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் சில ஆபத்தான கட்டிடங்கள் காலி செய்யப்படவில்லை என தெரிகிறது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று கோவை பெரியகடை வீதியில் ஆய்வு செய்தனர். அப்போது ஆபத்தான கட்டிடங்களை காலி செய்யாமல் இருப்பதை கண்டறிந்து அவற்றை காலி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரின் உதவியுடன் அவர்களை காலி செய்துவிட்டு கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். ஒரு கடையின் உரிமையாளர் ஐகோர்ட்டில் தடைஆணை பெற்று இருப்பதாக கூறி ஆணையை காண்பித்தார். அந்த கடையை, சமூக இடை வெளியை கடைபிடிக்கவில்லை என்று கூறி சீல் வைக்க முயன்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதைத்தொடர்ந்து அந்த கடைக்கு அபராதம் மட்டும் விதித்ததுடன், கோர்ட்டு தடை ஆணையை ரத்து செய்ய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, இடிந்து விழும் நிலையில் உள்ள ஒரே கட்டிடத்தில் இருந்த 19 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. மேல் தளத்துக்கு செல்ல முடியாத வகையில் படிக்கட்டுகளும் மூடப்பட்டுள்ளன என்றனர்.

Next Story