ஜாமீனில் விடுதலையான பின்பும் போலீஸ் தொல்லை கொடுப்பதாக கலெக்டர் அலுவலகம் முன்பு மாவோயிஸ்டு கோஷம்


ஜாமீனில் விடுதலையான பின்பும் போலீஸ் தொல்லை கொடுப்பதாக கலெக்டர் அலுவலகம் முன்பு மாவோயிஸ்டு கோஷம்
x
தினத்தந்தி 24 Nov 2020 3:30 AM IST (Updated: 24 Nov 2020 9:15 AM IST)
t-max-icont-min-icon

ஜாமீனில் விடுதலையானபின்பும், போலீசார் தொல்லை கொடுப்பதாக கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு மாவோயிஸ்டு வீரமணி கோஷம் எழுப்பினார்.

கோவை,

உக்கடம் புல்லுக்காடு பகுதியில் வசித்து வருபவர் மாவோயிஸ்டு வீரமணி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி ஜாமீனில் விடுதலையாகி சிறையிலிருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தனது மனைவி கைருனிசா மற்றும் வக்கீலுடன் வந்த வீரமணி, போலீசார் தனது நிம்மதியை கெடுத்து வருவதாகவும், தன்னை சுதந்திரமாக வாழ விடுவது இல்லை என்றும் கோஷம் எழுப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தது முதல் தற்போது வரை கோவை பீளமேடு பகுதியில் உள்ள “கியூ“ பிரிவு அலுவலகத்தில் தினமும் 2 முறை கையெழுத்திட்டு வருகிறேன். இந்த சூழ்நிலையில், நான் குடியிருந்து வரும் வீட்டின் உரிமையாளரிடம் என்னை வீட்டைவிட்டு காலி செய்யக்கூறி காவல்துறையினர் மிரட்டினர். மேலும், போலீசார் விசாரணை என்ற பெயரில் எங்கள் வீட்டில் அருகில் உள்ளவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். எந்த நேரமும் கண்காணிப்பு என்ற பெயரில் என்னை தொடர்வதும், புகைப்படம் எடுப்பதும், என்னுடன் பேசுபவர்களை புகைப்படம் எடுப்பது என்று எனக்கு தொல்லை கொடுத்து நிம்மதியை கெடுக்கின்றனர். என்னை தலைமறைவாக உள்ள குற்றவாளியை போல சித்தரிக்கின்றனர். எனவே எனது அடிப்படை உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மாவோயிஸ்டு வீரமணி தெரிவித்தார். பின்னர் அவர் இது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனுவும் கொடுத்தார்.

Next Story