தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி - பழனி அருகே பரிதாபம்


தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி - பழனி அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 24 Nov 2020 3:45 AM IST (Updated: 24 Nov 2020 9:18 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நெய்க்காரப்பட்டி, 

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த காவலப்பட்டியை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது 21). இவர், பழனியில் உள்ள கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். பழனி அக்கமநாயக்கன்புதூரை சேர்ந்தவர் பிரபாகரன் (23). இவர், பழனி அருகே உள்ள தனியார் கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நண்பர்களான இவர்கள் 2 பேரும், அக்கமநாயக்கன்புதூரை சேர்ந்த தங்களது நண்பரான கதிரேசனை (21) பார்க்க சென்றனர். பின்னர் அவர்கள் 3 பேரும், கதிரேசனின் மோட்டார் சைக்கிளில் அக்கமநாயக்கன்புதூரில் இருந்து பாப்பம்பட்டி நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை கதிரேசன் ஓட்டினார்.

பழனி-நெய்க்காரப்பட்டி சாலையில் பாப்பம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வளைவில் வந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அங்கிருந்த பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது. இந்த விபத்தில் ஜெயசூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த பிரபாகரன், கதிரேசனை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி பிரபாகரன் பரிதாபமாக இறந்தார். கதிரேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பலியான ஜெயசூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் விபத்துக்கு உள்ளாகி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story