சுடுகாட்டிற்கு சாலை கேட்டு கிராம மக்கள் திடீர் மறியல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


சுடுகாட்டிற்கு சாலை கேட்டு கிராம மக்கள் திடீர் மறியல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Nov 2020 10:15 AM IST (Updated: 24 Nov 2020 10:08 AM IST)
t-max-icont-min-icon

சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி கேட்டு இடையஞ்சாத்து இந்திராநகர் மக்கள் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்,

வேலூரை அடுத்த இடையஞ்சாத்து இந்திராநகர் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் வசிப்பவர்கள் இறந்தால் அவர்களின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல சரியான சாலை வசதி இல்லை என்று கூறப்படுகிறது. எனவே சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி செய்து தரக்கோரி இந்திராநகர் பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக மக்கள் குறைதீர்வு நாள் முகாமில் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை சாலை வசதி செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் புனிதா தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். 5 பேர் மட்டுமே மனு அளிக்க செல்ல வேண்டும் என்று போலீசார் கூறினார். அதற்கு பொதுமக்கள் சுடுகாட்டிற்கு சாலை கேட்டு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அனைவரும் சென்று கலெக்டரிடம் மனுஅளித்து முறையிட உள்ளோம் என்று தெரிவித்தனர்.

அதற்கு இன்ஸ்பெக்டர் புனிதா, 5 பேருக்கு மேல் கலெக்டர் அலுவலகம் சென்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். அதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென கலெக்டர் அலுவலக மேம்பாலம் பகுதியில் சத்துவாச்சாரி செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் இன்ஸ்பெக்டர் புனிதா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கொரோனா தொற்று காரணமாக கலெக்டர் அலுவலகத்துக்குள் 5 பேருக்கு மேல் கூட்டாக செல்ல அனுமதி கிடையாது. எனவே 5 பேர் மட்டும் சென்று மனு அளிக்கும்படி கூறினர். அதைத்தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் கிராம முக்கிய பிரமுகர்கள் 5 பேர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த வேலூர் தாசில்தார் ரமேஷிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி போர்க்கால அடிப்படையில் செய்து தரும்படி கூறப்பட்டிருந்தது.

வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனுகொடுக்க வந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story