மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்: குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை


மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்: குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Nov 2020 11:45 AM IST (Updated: 24 Nov 2020 11:51 AM IST)
t-max-icont-min-icon

கடல் பகுதியில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாகர்கோவில்,

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தாழ்வு மண்டலமாகவும், பின் மேலும் தீவிரமடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் ‘நிவர்‘ புயலாகவும் மாறக்கூடும் என்று வானிலை எச்சரிக்கை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த புயல் 25-ந் தேதி (நாளை) காரைக்காலுக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடக்க கூடும் என்றும், இதனால் 25-ந் தேதி வரை தென்மேற்கு மற்றும் மேற்குமத்திய வங்கக்கடல், மன்னார் வளைகுடா, புதுவை மற்றும் அதனையொட்டிய தமிழக கடற்பகுதிகளில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மேற்கூறிய பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை எச்சரிக்கை முன்னறிவிப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது. பேரிடரினை எதிர்கொள்ளும் பொருட்டு குமரி மாவட்ட பொதுமக்கள் பல்வேறு அறிவுரைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

கடலோர பகுதிகளில் அனைத்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் உடனே கரை திரும்ப வேண்டும். மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள். இதனை தங்களது மீனவ கிராமத்தில் சம்பந்தப்பட்ட மீனவர்கள் அறிந்திடும் வண்ணம் பொது அறிவிப்பு செய்ய வேண்டும்.

தமிழகத்தை நோக்கி புயல் வரும் நிலையில் பொதுமக்கள் தங்களது அடையாள ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். குடிக்க உகந்த நல்ல நீரை போதுமான அளவுக்கு பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அவசர காலம் மற்றும் அன்றாடம் தேவைப்படும் மருந்து பொருட்களை தயாராக வைத்திருத்தல் அவசியம். உறுதியான கயிறுகள், காற்றை சமாளித்து எரியும் விளக்குகள் வைத்து கொள்ளுங்கள். மேலும் பேட்டரியில் இயங்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், பேரிச்சை, திராட்சை போன்ற உலர்ந்த பழவகைகள், வறுத்த வேர்க்கடலை மற்றும் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, மண்எண்ணெய் ஆகியவற்றை போதுமானஅளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

இதுமட்டுமல்லாது அடையாள ஆவணங்களான ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி கணக்குபுத்தகங்கள், கல்விச்சான்றிதழ்கள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை நீர் படாத வகையில் பிளாஸ்டிக் உறைகளைக் கொண்டு பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும்.

புயல் வருவதற்கு முன்பு, வீட்டின் கதவுகள், ஜன்னல் கதவுகளை பழுது பார்த்து வைத்து கொள்ளுங்கள். வீட்டின் அருகில் உள்ள காய்ந்த மரங்கள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்றிவிடுங்கள். புயல் கரையை கடக்கும் போது, குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்குவெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்களைகேட்டு தெரிந்துகொண்டு அதன்படி செயல்படலாம்.

பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் வைப்பதோடு தீவனங்களை தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். பேரிடரினை எதிர்கொள்ள மண்டல அளவிலான 9 கண்காணிப்பு குழுக்களும், அனைத்து வருவாய் தாசில்தார்களும் தயார் நிலையிலிருக்க வலியுறுத்தப்பட்டு உள்ளனர். வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தேவை ஏற்படுமாயின் தற்காலிக முகாம்களுக்கு மாற்றம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை அலுவலர்கள் ஆபத்தான நிலையிலுள்ள மரங்கள் மற்றும் பிற சேதம் விளைவிக்கும் பொருட்களை கண்டறிந்து அகற்ற வேண்டும். ஆபத்தான நிலையிலுள்ள மின் கம்பங்களை மாற்றம் செய்திட மின்சாரத்துறையினர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

பழுதடைந்த நிலையிலுள்ள அரசு கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஆபத்தான நிலையிலுள்ள மரங்கள், மின்கம்பங்கள் பற்றிய விவரங்களை 24 மணி நேரம் செயல்படும் மாவட்ட அவசரகால இலவச தொலைபேசி எண் 1077 மற்றும் 231077-க்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story