சாலை விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் இழப்பீடு ஐகோர்ட்டு உத்தரவு
சாலை விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரே தாலுகா ராமகிரி கிராமத்தை சேர்ந்தவர் ஹொன்னப்பா. அவரது மகன் அமித் (வயது 17). கடந்த 2017-ம் ஆண்டு அங்கு நடைபெற்ற சாலை விபத்தில் சிறுவன் அமித் மரணம் அடைந்தார். தனது மகனின் இறப்புக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிடும் படி அவரது தந்தை ராணிபென்னூரில் உள்ள மோட்டார் வாகன விபத்து நிவாரண தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த அந்த தீர்ப்பாயம், விபத்தில் உயிரிழந்த அந்த சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.6.6 லட்சத்தை வழங்கும்படி காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவரது தந்தை கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது.
ரூ.17 லட்சம் இழப்பீடு
அந்த சிறுவனின் குடும்பத்தினர் சார்பில் ஆஜரான வக்கீல், சாலை விபத்தில் இறந்த சிறுவன், பால் பண்ணை தொழில் செய்து வந்தார் என்றும், அவரது வருமானத்தை நம்பி குடும்பம் இருந்ததாகவும், அதனால் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடுமாறும் வாதிட்டார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் நரேந்தர், அருண் ஆகியோர் அடங்கிய அமர்வு, சாலைவிபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.17 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story