கர்நாடக அரசு சார்பில் கொரோனா தடுப்பூசியை வினியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள் சுகாதாரத்துறை மந்திரி தகவல்


கர்நாடக அரசு சார்பில் கொரோனா தடுப்பூசியை வினியோகிக்க சிறப்பு ஏற்பாடுகள் சுகாதாரத்துறை மந்திரி தகவல்
x
தினத்தந்தி 25 Nov 2020 4:09 AM IST (Updated: 25 Nov 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசு சார்பில் கொரோனா தடுப்பூசியை வினியோகம் செய்ய சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

பெங்களூரு. 

கொரோனா செயல்படை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தடுப்பூசியை சேகரித்து வைப்பது மற்றும் அதை வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கர்நாடகத்தில் 29 ஆயிரத்து 451 கொரோனா தடுப்பூசி மையங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. 1 லட்சத்து 8 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள். 80 சதவீத தனியார் மருத்துவமனைகளும் தங்களின் விவரங்களை பகிர்ந்து கொண்டுள்ளன. மீதமுள்ள 20 சதவீத மருத்துவமனைகளும் விரைவில் தங்களின் விவரங்களை பகிர்ந்து கொள்ளும்.

கர்நாடகத்தில் 2,855 தடுப்பூசி சேமிப்பு கிடங்குகள் உள்ளன. உரிய நேரத்தில் தடுப்பூசி மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் வகையில் பெங்களூரு, சிவமொக்கா, பல்லாரியில் மண்டல தடுப்பூசி சேமிப்பு கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு கிடங்குகளை ஆய்வு செய்யும் பணிகள் முடிவடைந்துள்ளன. 10 குளிர்பதன கிடங்குகளும், 4 உறைவிப்பான் (பிரீசர்ஸ்) அமைப்புகள் உள்ளன.

குளிர்பதன சேமிப்பு

இது தவிர மத்திய அரசு 3 குளிர்பதன கிடங்குகள் மற்றும் 2 உறைவிப்பான் அமைப்புகளை வழங்குகிறது. இதற்கான கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எவ்வளவு குளிர்பதன சேமிப்பு கிடங்குகள் தேவை, எத்தனை தடுப்பூசி குப்பிகள் வரும், அதற்கு எவ்வளவு இடம் தேவை என்பது குறித்து இன்னும் மதிப்பிட வேண்டியுள்ளது.

தடுப்பூசி திட்டத்திற்கு உலர் சேமிப்பு கிடங்கு வசதியையும் ஏற்படுத்த வேண்டும். கால்நடைத்துறையில் உள்ள குளிர்பதன சேமிப்பு கிடங்குகளும் பயன்படுத்திக் கொள்ளப்படும். உதிரி குளிர்பதன சேமிப்பு வசதிகள் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன. அதுகுறித்தும் விவரங்கள் சேகரிப்பட்டு வருகின்றன. ஆகமொத்தம் கர்நாடக அரசு சார்பில் கொரோனா தடுப்பூசியை வினியோகம் செய்ய சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு சுதாகர் தெரிவித்துள்ளார்.

Next Story