புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கிராமப்புறங்களில் அமைச்சர் கந்தசாமி ஆய்வு


புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கிராமப்புறங்களில் அமைச்சர் கந்தசாமி ஆய்வு
x
தினத்தந்தி 24 Nov 2020 11:04 PM GMT (Updated: 24 Nov 2020 11:04 PM GMT)

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கிராமப்புறங்களில் அமைச்சர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.

பாகூர், 

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று (புதன்கிழமை) புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து புயலை சமாளிக்க புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கான பணிகளில் அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். அமைச்சர்களும் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

ஏம்பலம் தொகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கந்தசாமி நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம், அரங்கனூர், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

மக்கள் குற்றச்சாட்டு

அப்போது பொதுமக்களிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அரசு அறிவித்துள்ள இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார். பனித்திட்டு பகுதியில் பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 20 வீரர்கள் தங்கியிருந்தனர். அவர்களை சந்தித்து மக்களுக்கு வேண்டிய உதவிகளை உடனுக்குடன் செய்யுமாறு அமைச்சர் கந்தசாமி கேட்டுக்கொண்டார்.

கடற்கரையையொட்டிய நரம்பை, பனித்திட்டு கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டபோது, அப்பகுதி மக்கள் அரசு வேண்டிய உதவிகளை செய்யவில்லை. மழை காலங்களில் வேண்டிய நிவாரண உதவிகள் செய்வதில்லை என்று குற்றம்சாட்டினர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட துணை கலெக்டர் அஸ்வின் சந்துரு, மீன்வளத்துறை இயக்குனர் முத்துமீனா, பாகூர் தாசில்தார் குமரன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன், மின் துறை உதவிப்பொறியாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 

Next Story