சிட்லப்பாக்கம் ஏரி நிலத்தில் கட்டிடப்பணிகள் மேற்கொள்ள தடை ஐகோர்ட்டு உத்தரவு


சிட்லப்பாக்கம் ஏரி நிலத்தில் கட்டிடப்பணிகள் மேற்கொள்ள தடை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 Nov 2020 11:18 PM GMT (Updated: 24 Nov 2020 11:18 PM GMT)

சிட்லப்பாக்கம் ஏரி நிலத்தின் கட்டிடப்பணிகளை மேற்கொள்ள சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் வைத்தியநாதன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “83 ஏக்கர் சுற்றளவு கொண்ட சிட்லப்பாக்கம் ஏரி, தற்போது 33 ஏக்கராக சுருங்கியுள்ளது. இங்குள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் ஏரியை பழைய நிலைக்கு கொண்டு வர அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த ஆக்கிரமிப்புகளால், ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் ஏரி நிரம்பி, தண்ணீர் எல்லாம் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. 2015-ம் ஆண்டு பெய்த கனமழையினால் ஏற்பட்ட பெருவெள்ளத்திலும் இப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை எல்லாம் தடுக்காமல், அதிகாரிகள் செயல்படுகின்றனர்” என்று கூறியிருந்தார்.

ஒருங்கிணைந்த கட்டிடம்

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சுமார் ஒரு லட்சம் சதுர அடி ஏரிநிலத்தை, நத்தம் புறம்போக்கு என்று வகை மாற்றி, அதை மத்திய கிடங்கு கழகத்துக்கு அதிகாரிகள் வழங்கியுள்ளனர். அதிகாரிகளின் இந்த செயல் ஆச்சரியம் அளிக்கிறது.

நிலத்தை வகை மாற்றியதை திரும்ப பெறவேண்டும். இந்த நிலம் வகை மாற்றிய பின்னர், என்னென்ன பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது? என்பது குறித்து தமிழக அரசு ஒருங்கிணைந்த அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். இந்த பகுதியில் எந்த ஒரு கட்டிட பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. கட்டிட பணிகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

Next Story