நெல்லை அருகே நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்: போலீசார் முன்னிலையில் பெண் தீக்குளித்து தற்கொலை
மகனை விசாரணைக்காக அழைத்து சென்றதை தடுத்தபோது தாக்கியதால் போலீசார் முன்னிலையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பேட்டை,
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி சத்யாநகரைச் சேர்ந்தவர் லட்சுமி மகள் சகுந்தலா (வயது 45). இவர் தனது கணவரை பிரிந்து 2 மகன்களுடன் வசித்து வந்தார். மூத்த மகன் பிரசாந்த் (22), இளைய மகன் பிரதீப் (20).
கடந்த 3-ந் தேதி சுத்தமல்லி பகுதியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 10 பவுன் நகை, மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் நேற்று முன்தினம் பிரதீப், அதே பகுதியைச் சேர்ந்த அன்புராஜ், அருள் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அதில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் மடிக்கணினி உள்ளிட்டவைகளை திருடியதை 3 பேரும் ஒப்புக்கொண்டனர். அந்த மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் பிரதீப் வீட்டில் இருந்தது. அதை எடுப்பதற்காக நேற்று அதிகாலை 3 மணி அளவில் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரி, சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் சத்யா நகருக்கு புறப்பட்டு சென்றனர்.
போலீசார் முன்னிலையில் தீக்குளிப்பு
அங்குள்ள பிரதீப் வீட்டிற்கு போலீசார் சென்று சோதனை நடத்தினார்கள். திருடப்பட்ட மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை போலீசார் மீட்டனர். அத்துடன் அங்கிருந்த பிரதீப் அண்ணன் பிரசாந்தையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதற்கு அவரது தாயார் சகுந்தலா எதிர்ப்பு தெரிவித்து தடுத்தார். திருட்டு வழக்கில் இளைய மகனை பிடித்து சென்றது மட்டுமல்லாமல், மற்றொரு மகனையும் ஏன் பிடித்து செல்கிறீர்கள் என கேட்டார். அப்போது, சகுந்தலாவை போலீசார் லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று மண்எண்ணெய் கேனை எடுத்து கொண்டு வெளியே வந்தார். திடீரென போலீசார் முன்னிலையில் சகுந்தலா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதை சற்றும் எதிர்பாராத அங்கு இருந்த போலீசார், பிரசாந்த் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பரிதாப சாவு
சகுந்தலாவை போலீசார் காப்பாற்ற முயன்றனர். இதில் உடல் கருகிய சகுந்தலா கீழே விழுந்து உயிருக்கு போராடினார். பின்னர் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே சகுந்தலா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் காட்டுத்தீபோல் பரவியது. சகுந்தலாவின் உறவினர்கள் அவரது வீட்டின் முன் குவிந்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் நேற்று காலையில் சுத்தமல்லி போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தில் பிரதீப்பை சுத்தமல்லி போலீசார் பிடித்துள்ளனர். திருட்டு போன மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் பிரதீப் வீட்டில் இருப்பது தெரியவந்தது. அதை மீட்பதற்காக போலீசார் அங்கு சென்றனர்.
வீட்டுக்கு சென்று பொருட் களை மீட்டபோது, அங்கிருந்த பிரதீப்பின் தாயார் சகுந்தலா திடீரென்று தீக்குளித்தார். போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
காப்பாற்ற முயற்சி
சகுந்தலா தீக்குளித்தபோது அவரை காப்பாற்ற போலீசார் முயற்சி செய்து உள்ளனர். ஆனால், அவர் தீக்குளித்தபோது போலீசார் தடுக்காமல் இருந்ததாகவும், காப்பாற்ற முயன்ற உறவினர்களை போலீசார் தடுத்ததாகவும் புகார்கள் கூறப்பட்டு உள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரணை நடத்தப்படும். மேலும் கைதான பிரதீப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து சமீபத்தில் வெளியே வந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பரபரப்பு
இந்த சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நெல்லை அருகே விசாரணைக்காக மகனை அழைத்து சென்றதால் போலீசார் முன்னிலையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story