ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை விழிப்புணர்வு பிரசார வாகனம் கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்


ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை விழிப்புணர்வு பிரசார வாகனம் கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Nov 2020 12:27 AM GMT (Updated: 25 Nov 2020 12:27 AM GMT)

தென்காசி மாவட்டத்தில் ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் சமீரன் நேற்று தொடங்கி வைத்தார்.

தென்காசி, 

தமிழக அரசு வாசக்டமி இருவார விழா இந்த மாதம் 21-ந் தேதி முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இந்த இரு வார விழாவை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இந்த விழாவில் முதல் வாரம் 27-ந் தேதி வரை ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை வாசக்டமி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், துண்டுப்பிரசுரம் விநியோகித்தல், தகுதிவாய்ந்த தம்பதியர்களை களப்பணியாளர்கள் நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒலிபெருக்கி விளம்பரம் செய்தல் ஆகியன நடைபெற்று வருகின்றது.

இதன்படி தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நவம்பர் 28-ந் தேதி முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை தினமும் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் வருகிற 30 -ந் தேதி மற்றும் அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந் தேதி ஆகிய இரண்டு நாட்களிலும் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு வாகனம்

இதன்படி, ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல ஒரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்காசியில் நேற்று இந்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் நெடுமாறன், குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் ராமநாதன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலு.சிவலிங்கம், தென்காசி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், ஆஸ்பத்திரி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜ்குமார், மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் முருகன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் டேவிட் ஞானசேகர், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ரகுபதி மற்றும் வட்டார சுகாதார புள்ளியலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில், “இந்த சிகிச்சை மிகவும் எளிதான சிகிச்சையாகும். கத்தி இல்லை, தையல் இல்லை, வலி இல்லை, மயக்க மருந்து இல்லை, சில நிமிடங்களில் சிகிச்சை முடிந்துவிடும், அன்றே வீட்டிற்கு திரும்பலாம். பயிற்சி பெற்ற சிறப்பு டாக்டர்களால் சிகிச்சை செய்யப்படுகிறது.

இந்த சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு, ரூ. 1,100-ம், நன்கொடையாளர்கள் மூலம் 5 கிராம் வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கப்படும். தகுதியான ஆண்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை செய்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story