‘நிவர்’ புயல் எதிரொலி: திருவாரூர் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்; காய்கறி வாங்க குவிந்த மக்கள் - முன்எச்சரிக்கையாக மெழுகுவர்த்தி, ஸ்டார்ச் லைட்டுகளை வாங்கி சென்றனர்


‘நிவர்’ புயல் எதிரொலி: திருவாரூர் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்; காய்கறி வாங்க குவிந்த மக்கள் - முன்எச்சரிக்கையாக மெழுகுவர்த்தி, ஸ்டார்ச் லைட்டுகளை வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 25 Nov 2020 3:45 AM IST (Updated: 25 Nov 2020 7:22 AM IST)
t-max-icont-min-icon

நிவர் புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காய்கறி வாங்க மக்கள் குவிந்தனர். முன்எச்சரிக்கையாக மெழுகுவர்த்தி, ஸ்டார்ச் லைட்டுகளை வாங்கி சென்றனர்.

திருவாரூர்,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிவர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று(புதன்கிழமை) கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் அதிதீவிர புயலாக காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் எனவும், புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய 4 இடங்களில் பணி மனை உள்ளது. இதில் பணிமனை வாரியாக திருவாரூர் பணிமனையில் இருந்து 69 பஸ்களும், மன்னார்குடி பணிமனையில் இருந்து 70 பஸ்களும், நன்னிலம் பணிமனையில் இருந்து 35 பஸ்களும், திருத்துறைப்பூண்டி பணிமனையில் இருந்து 56 பஸ்களும் என மொத்தம் 230 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பஸ்கள் நேற்று மதியம் 1 மணி முதல் படிப்படியாக வழிதடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து பஸ்களும் அந்தந்த பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

புயல் ஏதிரொலியாக பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. வெளியூர்களில் செல்பவர்கள் அரசின் உத்தரவு காரணமாக மதியத்திற்குள் வீடு திரும்பினர். திருவாரூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மாலை மழையின்றி மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

கஜா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது நிவர் புயலை கண்டு சற்று அச்சமடைந்துள்ளனர். இதனால் அரசு வழிகாட்டுதல் முறைகளை மக்கள் பின்பற்றி வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தென்னை மரங்களின் மட்டைகள் மற்றும் அனைத்து மரங்களில் உயர்ந்து வளர்ந்த கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். புயல் பாதிப்பினால் மின்சாரம் தடைப்படும் என்பதால் மெழுகுவர்த்தி, டார்ச்லைட்டுகளை வாங்கி சென்றனர். இதனால் பல இடங்களில் மெழுவர்த்திக்கு தட்டுபாடு ஏற்படும் நிலை இருந்தது.

பஸ் போக்குவரத்து நேற்று மதியம் முதல் நிறத்தப்பட்டதால் பெரும்பாலான தொழிலாளர்கள் வெளியூர்களில் வராததால் கட்டுமானம் உள்பட அனைத்து பணிகளும் முடங்கியது. மின்வாரியத்துறையினர் மின் கம்பங்கள் அருகில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அடிக்கடி மின் தடை நிலவியது.

திருவாரூர் நகரில் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு மழை நீர் தேங்காதவாறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நகரில் 12 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுரங்களில் மின்விளக்குகள் கீழே இறக்கப்பட்டன. எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துக்குமரன் தலைமையில் 128 ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

புயலையொட்டி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க சந்தை மற்றும் கடைகளில் நேற்று குவிந்தனர். மன்னார்குடியில் உழவர் சந்தை, மற்றும் கடைத்தெருவில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். கூட்டம் காரணமாக உழவர் சந்தை பகுதியிலும் கடைத்தெருவிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதியம் ஒரு மணியுடன் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Next Story