கரூரில் தடையை மீறி வேல் யாத்திரை: பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் உள்பட 100 பேர் கைது
கரூரில், தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதாக தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் வேல் யாத்திரை நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். இந்த யாத்திரை கடந்த 6-ந் தேதி திருத்தணி முருகன் கோவிலில் தொடங்கி டிசம்பர் 6-ந் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வேல் யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதன் காரணமாகவும், கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.
ஆனால், யாத்திரைக்கு எத்தனை தடைகள் வந்தாலும் வேல் துள்ளி வரும் என்று பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டதோடு தடையை மீறி யாத்திரை நடைபெற்று வருகிறது. அதன்படி, 11-வது நாளாக நேற்று வேல் யாத்திரை கரூருக்கு வந்தது. இதனால், அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு கோவை ரோட்டில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்பகுதியில் போக்குவரத்தும் மாற்றி விடப்பட்டது.
வேல்யாத்திரையில் பங்கேற்ற பா.ஜ.க. தமிழக தலைவர் முருகனுக்கு கோவை பை-பாஸ் சாலையில் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து பா.ஜ.க.வினர் கோவை ரோட்டில் ஊர்வலமாக வந்து கரூர் பஸ்நிலையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்திற்கு கரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார்.
இதில், கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் கரூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் கணேசமூர்த்தி, மாவட்ட தொழிற்பிரிவு தலைவர் செல்வராஜ் உள்பட ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வேல்யாத்திரை செல்ல முயன்றபோது மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தி, அவர்களை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் கரூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story