திருச்சியில் புயல், வெள்ள சேதம் பற்றி தெரிவிக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை - பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் 66 போலீசார்


திருச்சியில் புயல், வெள்ள சேதம் பற்றி தெரிவிக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை - பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் 66 போலீசார்
x
தினத்தந்தி 25 Nov 2020 11:00 AM IST (Updated: 25 Nov 2020 10:51 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் புயல், வெள்ள சேதம் பற்றி தெரிவிக்க மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. பேரிடரை எதிர்கொள்ள 66 போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

திருச்சி,

திருச்சி மாநகர காவல் ஆணையரகம் சார்பில் நிவர் புயலை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பேரிடர் காலத்தில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு அந்தந்த பகுதியில் உள்ள 21 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

திருச்சி கிழக்கு பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி யூ.டி.வி. உயர்நிலைப்பள்ளி, இ.ஆர்.உயர்நிலைப்பள்ளி, டி.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி, கார்மல் மெட்ரிக் பள்ளி, சாரநாதன் பொறியியல் கல்லூரி ஆகிய 6 பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், திருச்சி மேற்கு பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சேவாசங்கம் உயர்நிலைப்பள்ளி, கார்மல் மேல்நிலைப்பள்ளி, தேசிய கல்லூரி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி, காவேரி மெட்ரிக் பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரி, ஆர்.சி.பள்ளி, பிரான்சிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, கி.ஆ.பெ.வி. உயர்நிலைப்பள்ளி, அரபிந்தோ பள்ளி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளி மற்றும் கல்லூரிகள் ஸ்ரீரங்கம் பகுதியில் அய்யனார் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி ஆகிய இடங்கள் மற்றும் மாநகராட்சி மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் பேரிடர் காலத்தில் பொதுமக்களின் நலனுக்காக பேரிடர் மேலாண்மை பயிற்சி முடித்த 66 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் (பெண் போலீசார் உள்பட) தயார் நிலையில் அறிவுரைகள் வழங்கப்பட்டு உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் பாதிக்கப்படும் பகுதிக்கு அவர்கள் விரைந்து சென்று பொது மக்களுக்கு உதவி செய்ய 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் பேரிடர் மேலாண்மைக்கு என தனியாக பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, ஆபத்து காலத்தில் காப்பாற்றுதல் மற்றும் இதர தகவல்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளது. புயல், வெள்ள சேதம் மற்றும் பேரிடர் மேலாண்மை பற்றிய தகவல்களை தெரிவிக்க மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனியாக ஒரு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொலைபேசி எண் 0431-2331929- வாட்ஸ்-அப் எண் 9626273399 ஆகும்.

பேரிடர் மேலாண்மை எதிர்கொள்வதற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற 66 போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் அங்கு சென்று பார்வையிட்டார். அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Next Story