நிவர் புயல் காரணமாக பாம்பனில் கடல் சீற்றம் - கரையோர வீடுகள் சேதம்
நிவர் புயல் காரணமாக பாம்பனில் கடல் சீற்றம் நேற்று அதிகமாக இருந்தது. இதனால் கரையோர வீடுகள் சேதம் அடைந்தன.
ராமேசுவரம்,
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 2-வது நாளாக நேற்றும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.
பாம்பன் பகுதியில் வழக்கத்தை காட்டிலும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. வடக்கு கடல் பகுதியில் 4 அடி உயரத்திற்கு கடல் அலைகள் தடுப்பு சுவரின் மீது மோதி மேல்நோக்கி சீறி எழுந்தன. கடல் சீற்றத்தால் வடக்கு கடற்கரையில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததுடன், 3 குடிசைகளும் சேதமடைந்தன.
அதுபோல் ராமேசுவரம், பாம்பன் தங்கச்சிமடம் பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதுடன் 2-வது நாளாக நேற்றும் பகல் முழுவதும் வெயில் சுவடு தெரியாமல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ச்சியான நிலையே நிலவியது. போதிய வெளிச்சம் இல்லாததால் பகல் நேரத்திலும் பாம்பன் ரெயில் பாலத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் ரெயில் என்ஜின் இயக்கப்பட்டது. சென்னை சென்ற சேது எக்ஸ்பிரஸ் பயணிகள் இல்லாமல் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு வந்து, மண்டபத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
3-வது நாளாக நேற்றும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டதால் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்பட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகளும், 3 ஆயிரத்துக்கும் அதிகமான நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரம் உள்ள கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதுபோல் தங்கச்சிமடம் மற்றும் மண்டபம் பகுதியிலும் நேற்று கடல் சீற்றமாக காணப்பட்டது.
Related Tags :
Next Story