அகழாய்வு பகுதிகள் குறித்து பஸ், ரெயில் நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து


அகழாய்வு பகுதிகள் குறித்து பஸ், ரெயில் நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
x
தினத்தந்தி 25 Nov 2020 11:30 AM IST (Updated: 25 Nov 2020 11:24 AM IST)
t-max-icont-min-icon

பழமையான இடங்கள் மற்றும் அகழாய்வு நடைபெறும் இடங்கள் குறித்து பஸ், ரெயில் நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் குறித்து புத்தகம் எழுதி உள்ளேன். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் கொற்கை என்ற கிராமம் உள்ளது.

தாமிரபரணி ஆற்றின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த கொற்கையில் தான் பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டை ஆட்சி செய்து உள்ளனர். இந்த இடம் பற்றி, சங்க கால தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல முக்கியமான துறைமுக நகரமாக விளங்கி இருக்கலாம் என்று புவியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொற்கை கிராமத்தில் அகழாய்வு நடத்தவும், இங்கு கண்டெடுக்கப்படும் பழமையான பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்தி, அறிக்கை வெளியிடவும் உத்தரவிட வேண்டும்.“ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தமிழ்நாட்டுக்கு தான் அதிக அளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் பழமையான இடங்கள், அகழாய்வு நடைபெறும் இடங்கள் பற்றி பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு தெரியப்படுத்தப்படுவது இல்லை.

மதுரை ஐகோர்ட்டின் எதிர்புறம் உள்ள யானைமலையில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணர் படுகைகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளன. ஆனால் இங்குள்ள வக்கீல்கள் எத்தனை பேருக்கு இதுபற்றி தெரியும்“ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பழமையான இடங்கள் குறித்து அறிவிப்பு பலகைகள் வைப்பதால் அப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதை தடுப்பதுடன், பழமை அழியாமல் பாதுகாக்கவும் முடியும். மேலும் சுற்றுலாவுக்காக தமிழகம் வருபவர்களையும் இது, அதிக அளவில் ஈர்ப்பதாக இருக்கும்.

மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு வார இறுதியில் லட்சக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனர். எனவே மக்களுக்கு பழமையான இடங்கள் மற்றும் தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், கோர்ட்டுகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பழமை வாய்ந்த இடங்கள், தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படும் இடங்களை பற்றிய விவரங்களுடன் அறிவிப்பு பலகைகள் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

பின்னர் இந்த வழக்கை வருகிற 9-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story