கால்நடைகளை தாக்கும் அம்மை நோய் பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை தேவை - கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
கால்நடைகளை தாக்கும் அம்மை நோய் பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவனிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாதம் தோறும் கடைசி வெள்ளிக்கிழமை நடந்து வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் கடந்த மாதம் காணொலி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று நவம்பர் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்தனர். விவசாய சங்க பிரதிநிதிகள் அவரவர் வீடுகளில் இருந்தே காணொலி காட்சி மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகளின் விவரம் வருமாறு:-
கீழ்பவானி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பவானி ஆற்றில் ராட்சத மின்மோட்டார்களை வைத்து சிலர் தண்ணீர் திருடி வருகிறார்கள். இந்த தண்ணீர் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பர்கூர் மலைக்கிராமத்தில் வங்கி சேவை இல்லாததால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அந்தியூருக்கு வரவேண்டி உள்ளது. இதனால் புதிதாக வங்கி கிளை ஒன்றை பர்கூரில் தொடங்க வேண்டும்.
மலைப்பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். அந்தியூர் பெரியஏரி, சந்தியாபாளையம் ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மரவள்ளி கிழங்குக்கு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
கால்நடைகளை தாக்கும் அம்மை நோய் பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நோய் தாக்கப்பட்ட மாடுகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். ஆவின் கூட்டுறவு சங்கங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சள் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் மஞ்சள் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்து வருகிறார்கள். எனவே விலை வீழ்ச்சியை தடுக்கவும், உரிய விலை கிடைக்கவும் இ-டெண்டர் முறையை அமல்படுத்த வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பை டிசம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும். அடுத்த போகத்திற்கான தண்ணீர் திறப்பை முன்கூட்டியே அறிவித்தால் வேளாண்மை முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு வசதியாக இருக்கும். அடுத்த மாதம் (டிசம்பர்) 2-வது வாரத்தில் நெல் அறுவடை பணிகள் தொடங்க உள்ளதால் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
கூட்டத்தில் கலெக்டர் சி.கதிரவன் பேசும்போது கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை 78 ஆயிரத்து 759 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. விதை நெல் 289 டன் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதுபோல் பயறு வகைகள் 24 டன், எண்ணெய் வித்துகள் 107 டன் விதையாக வினியோகம் செய்யப்பட்டது. நடப்பு பருவத்துக்கு யூரியா 29 ஆயிரத்து 452 டன், டி.ஏ.பி. 6 ஆயிரத்து 760 டன், பொட்டாஷ் 7 ஆயிரத்து 140 டன், காம்பிளக்ஸ் 14 ஆயிரத்து 860 டன், கலப்பு உரங்கள் 1,862 டன் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் தேவையான அளவுக்கு உரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பில் உள்ளன.
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் விவசாயிகளை நேரடியாக சந்திக்கும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை தமிழக அரசு தொடங்குகிறது. இந்த வாரம் முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளை சந்தித்து பயிர்கள் தொடர்பான ஆலோசனைகள் வழங்குவார்கள்.
இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
கூட்டத்தில் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சின்னசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் தாமோதரன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் விஸ்வநாதன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, வேளாண் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் சாவித்திரி, வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் சண்முகசுந்தரம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அரவிந்தன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story