தர்மபுரி மாவட்டத்தில் குற்ற வழக்குகள் விசாரணை குறித்த கலந்தாய்வு கூட்டம்


தர்மபுரி மாவட்டத்தில் குற்ற வழக்குகள் விசாரணை குறித்த கலந்தாய்வு கூட்டம்
x
தினத்தந்தி 25 Nov 2020 2:30 PM IST (Updated: 25 Nov 2020 2:30 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவாக முடிப்பது தொடர்பாக நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக்கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவது தொடர்பாக நீதிபதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வு க்கூட்டம் தர்மபுரி ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜீவானந்தம், தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, குற்ற வழக்குகளை போலீசார் கையாள வேண்டிய முறைகள் குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசினார்கள். போலீஸ் நிலையங்களில் பதியப்பட்ட குற்ற வழக்குகளின் புலன் விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும். புலன் விசாரணை நடக்கும்போது பின்பற்றவேண்டிய சட்ட விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்.

ஆவணங்கள்

புலன் விசாரணை தொடர்பான ஆவணங்களை குறித்த நேரத்தில் கோர்ட்டுகளில் சமர்ப்பிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வழக்குகளில் சிக்கி தலைமறைவாக உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து கோர்ட்டுகளில் ஆஜர்படுத்த வேண்டும் என்று இந்த கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து குற்றவியல் மாஜிஸ்திரேட்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story