ரூ.1 லட்சம் கடனுக்காக ஆண் குழந்தையை விற்ற தந்தை உள்பட 3 பேர் கைது சேலத்தில் பரபரப்பு


ரூ.1 லட்சம் கடனுக்காக ஆண் குழந்தையை விற்ற தந்தை உள்பட 3 பேர் கைது சேலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Nov 2020 4:37 PM IST (Updated: 25 Nov 2020 4:37 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ரூ.1 லட்சம் கடனுக்காக ஆண் குழந்தையை விற்ற தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம், 

சேலம் தாதகாப்பட்டி பில்லுக்கடை பகுதியை சேர்ந்தவர் சவுக்கத் அலி (வயது 32), கூலித்தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவருடைய மனைவிக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு 2-வதாக ஆண் குழந்தை பிறந்தது. சவுக்கத் அலி அதே பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

ஒரு கட்டத்தில் 2-வது பிறந்த ஆண் குழந்தையை விற்று கடனை அடைக்க சவுக்கத் அலி முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவரிடம் ஆண் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்று கடனை அடைத்தார். அதே நேரத்தில், சவுக்கத் அலி வீட்டிற்கு உறவினர்கள் வந்து குழந்தை எங்கே? என்று கேட்டனர். அதற்கு அவர் நோய்வாய்ப்பட்டு குழந்தை இறந்துவிட்டதாக கூறி உள்ளார்.

3 பேர் கைது

இதில் சந்தேகமடைந்த உறவினர்கள் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது ரூ.1 லட்சத்துக்கு குழந்தையை விற்று தந்தை சவுக்கத் அலி கடனை அடைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சவுக்கத் அலி, குழந்தையை விலைக்கு வாங்கிய சுந்தரம் மற்றும் சேட்டு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சுந்தரத்திடம் இருந்து குழந்தையை மீட்டு சவுக்கத் அலியின் மனைவியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story