சேலம் சிவதாபுரம், அம்மன் நகர் பகுதிகளில் நிவர் புயல் மழையால் தண்ணீர் புகுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை
சேலம் சிவதாபுரம் மற்றும் அம்மன்நகர் பகுதிகளில் நிவர் புயல் மழையால் தண்ணீர் புகுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் நிவர் புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள 23 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் சேலத்தாம்பட்டி ஏரியும் ஒன்றாகும். இந்த ஏரியில் புயல் மழையால் நீர் நிரம்பி பெருக்கெடுத்து ஓடினால் அருகில் உள்ள சிவதாபுரம், அம்மன் நகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் கருதுகிறது.
இதையொட்டி நேற்று அந்த பகுதியில் நிவர் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வு குறித்து கலெக்டர் ராமன் கூறியதாவது:-
வட்டமுத்தான்பட்டி ஊராட்சியில் உள்ள தாமரை ஏரி நிரம்பி அதன் உபரி நீர் தளவாய்ப்பட்டி ஏரிக்கு செல்கிறது. பின்னர் அதன் உபரி நீர் சேலத்தாம்பட்டி ஏரிக்கு வருவதால் மழைக்காலங்களில் இந்த ஏரி அடிக்கடி நிரம்புகின்றது.
முதல்-அமைச்சர் உத்தரவு
இங்கிருந்து உபரி நீர் வெளியில் செல்வதற்கு ஏற்கனவே, நீர் வழிப்போக்கிகள் அமைத்து வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த சூழ்நிலையில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருகி அருகில் உள்ள சிவதாபுரம் மற்றும் அம்மன்நகர் பகுதிகளில் நீர் புகுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இப்பகுதிக்கு சேலம் மாநகராட்சி, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் நிவர் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் சேலம் மாவட்டத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், சேலம் மாநகராட்சி குமரகிரி ஏரியில் உபரி நீர் வெளியேற்றும் பகுதியை மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு, ஏரி சீரமைப்பு மற்றும் உபரிநீர் வெளியேற்றும் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், சேலம் மாநகராட்சி ஆணையாளர் என்.ரவிச்சந்திரன், சேலம் மாநகர பொறியாளர் அசோகன், சேலம் உதவி கலெக்டர் மாறன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் என்.கோபிநாத், சூரமங்கலம் மண்டல உதவி ஆணையாளர் செல்வராஜ், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் செந்தில் குமார், சேலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமேகலை, செந்தில்குமார், உதவி பொறியாளர் பிரபுகுமார், சேலம் மேற்கு தாசில்தார் ரமேஷ்குமார் உள்பட வருவாய்த்துறை, வளர்ச்சித் துறை, சேலம் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story