சேலத்தில் பயங்கரம் ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை
சேலத்தில், ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம்,
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்னமாயகுளம் பகுதியை சேர்ந்தவர் எடிசன் (வயது 23). இவர், கஞ்சா போதையில் அந்த பகுதியில் ரகளையில் ஈடுபட்டு வந்ததால் அதே பகுதியை சேர்ந்த கோபிநாத் (28) மற்றும் தேவகுமார் ஆகியோரால் கடந்த 8.8.2020 அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, கடந்த 5-ந் தேதி சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தினமும் காலையிலும், மாலையிலும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து கடந்த 6-ந் தேதி முதல் சேலம் சூரமங்கலம் சுப்ரமணியம் நகர் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கோபிநாத் மற்றும் தேவகுமார் ஆகிய 2 பேரும் தங்கியிருந்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.
வெட்டிக்கொலை
இந்த நிலையில், நேற்று மாலை 5.30 மணி அளவில் இருவரும் வழக்கம்போல் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு அறைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது, சுப்ரமணியம் நகர் அருகே அவர்கள் சென்றபோது அங்கு நின்ற 3 பேர் வீச்சரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் விரட்டினர். இதனால் கோபிநாத் மற்றும் தேவகுமார் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து ஓட முயன்றனர். ஆனால், தேவகுமார் அங்கிருந்து தப்பித்து அருகில் உள்ள சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்றுவிட்டார். ஆனால் கோபிநாத் மட்டும் அந்த கும்பலிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.
இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கோபிநாத்தை ஓட, ஓட விரட்டி நடுரோட்டில் தாங்கள் வைத்திருந்த வீச்சரிவாள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். பின்னர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த கோபிநாத் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து சாலையில் சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். பின்னர் அந்த 3 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
3 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். இதைத்தொடர்ந்து கொலையாளிகள் சேலம் மாநகரை விட்டு தப்பி சென்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாநகர போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இதனை அறிந்தவுடன் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் இருந்த போலீஸ் உதவி கமிஷனர் பூபதிராஜன் மற்றும் போலீசார் புதிய பஸ் நிலையத்தில் கொலையாளிகள் 3 பேர் எங்கும் இருக்கிறார்களா? என்பது குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ரத்தக்கறையுடன் நின்று கொண்டு இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கார்த்திக், விக்னேஷ், அந்தோணி ஆகிய 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள் தான் கோபிநாத்தை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பரபரப்பு
ராமநாதபுரத்தில் எடிசனை கொலை செய்ததற்காக பழி தீர்க்கவே கோபிநாத்தை கொலை செய்திருப்பது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் துணை கமிஷனர் சந்திரசேகரன் ஆகியோர் நேற்று இரவு கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
சேலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில், ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story