திருப்பூர் மாநகரில் டெங்கு பரவலை தடுக்க 300 பேர் கொண்ட குழு அமைப்பு
திருப்பூர் மாநகரில் டெங்கு பரவலை தடுக்க 300 பேர் கொண்ட குழு அமைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகர பகுதியில் 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உத்தரவின்பேரில் மாநகராட்சி பகுதி முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் 300 பேர் கொண்ட கொசு ஒழிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
60 வார்டுகளை கொண்ட 4 மண்டலங்களிலும் தலா 75 பேர் என மொத்தம் 300 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து மருந்து தெளிப்பது, தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுப்பது, வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்துவது உள்ளிட்ட பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
இதுகுறித்து மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவன் கிருஷ்ண குமார் கூறியதாவது:-
டெங்கு கொசு ஒழிப்பு குழுவினர் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
நகர சுகாதார மைய செவிலியர்கள் காய்ச்சல், சளி, இருமல் கண்டறியும் வகையில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெங்கு கொசுப்புழுவை ஒழிக்கும் வகையில் மருந்து தெளிப்பது, குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
கொசு புகை மருந்து அடிக்கப்படுகிறது. வீடு வீடாக கொசு மருந்து தெளிக்க வருபவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story