வெள்ளகோவில் பகுதிக்கு பி.ஏ.பி.நீர் வினியோக விவரங்களை தர மறுக்கும் அதிகாரிகள் கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு


வெள்ளகோவில் பகுதிக்கு பி.ஏ.பி.நீர் வினியோக விவரங்களை தர மறுக்கும் அதிகாரிகள் கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு
x
தினத்தந்தி 25 Nov 2020 6:15 PM IST (Updated: 25 Nov 2020 6:15 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் பகுதிக்கு பி.ஏ.பி.நீர் வினியோக விவரங்களை அதிகாரிகள் தர மறுப்பதாகவும், தரக்குறைவாக நடத்துவதாகவும் விவசாயிகள் கலெக்டரை சந்தித்து முறையிட்டனர்.

திருப்பூர், 

பி.ஏ.பி.வெள்ளகோவில் கிளை ஆயக்கட்டுதாரர்களான விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்றுகாலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் விஜயகார்த்திகேயனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

வெள்ளகோவில் ஆயக்கட்டுகாரர்களாகிய நாங்கள் கடந்த வாரம் தங்களை சந்தித்து பி.ஏ.பி.நீர் வினியோகத்தில் நடக்கும் சட்ட மீறல்களை தடுக்குமாறு மனு கொடுத்தோம். நீங்கள் அந்த மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் தண்ணீர் வினியோகம் விவரங்களையும் மற்றும் சான்றுகளையும் பி.ஏ.பி. செயற்பொறியாளர் வழங்குமாறு உத்தரவிடப்பட்டது. அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் வழங்குமாறு வேண்டுகோள் வைத்தோம். ஆனால் பி.ஏ.பி. பொறியாளர்கள் அதை வழங்காமல் எங்களை அலைக்கழிக்கின்றார்கள். கருத்து கேட்பு கூட்டத்துக்கு எங்களை அழைத்து இருந்தனர். ஆனாலும் நாங்கள் அங்கு சென்ற பிறகு கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது.

நீர்ப்பாசன தகவல்

இருப்பினும் நாங்கள் அங்கு சென்று நீர்ப்பாசன தகவல்களை கேட்டோம். ஆனால் அதை தர மறுத்து விட்டனர். எங்களை தரக்குறைவாக நடத்தினர். அதிகாரிகள் எங்களை இப்படி நடத்தியது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தந்தது. பலமுறை கேட்டும் கொடுக்காமல் பல ஆண்டுகாலமாக வஞ்சிக்கப்பட்ட எங்களுக்கு வாய்ப்பு இல்லை என்பது போல நடத்தினார்கள். விவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் எங்களுக்கு எந்த தகவலும் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கவில்லை.

எங்களுடைய பங்கில் 50 சதவீதம் தண்ணீர் மட்டுமே நாங்கள் பெறுகிறோம். ஆனால் பி.ஏ.பி.நிர்வாகம் எங்களுக்கு 100 சதவீத பங்கை அணையிலிருந்து எடுக்கிறது. எங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் எங்கே போகிறது என்று தெரியவில்லை.

நல்ல தீர்வு வேண்டும்

அதிகாரிகள் எங்களை அலைக்கழித்து நாட்களை கடத்துகிறார்கள். எனவே அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு நல்ல தீர்வை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பினர் கூறும்போது ‘பி.ஏ.பி. பாசனத்துக்கு வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் விவரங்களை அதிகாரிகள் தர மறுக்கிறார்கள். இதுகுறித்து விவரம் கேட்க சென்ற போது காரசார வாக்குவாதம் நடந்தது. ஆனால் எங்கள் மீது பொய் புகார் தெரிவித்துள்ளனர். விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளார். தாராபுரம் சப்-கலெக்டர் விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்’ என்றனர்.

Next Story