2 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 38 ஆயிரம் பேர் விண்ணப்பம்


2 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 38 ஆயிரம் பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 25 Nov 2020 6:36 PM IST (Updated: 25 Nov 2020 6:36 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 38 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

திண்டுக்கல், 

தமிழகத்தில் கடந்த 16-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மேற்கொள்வதற்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பழனி, திண்டுக்கல், ஆத்தூர், நத்தம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 18 லட்சத்து 16 ஆயிரத்து 281 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி, தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் நகல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

சிறப்பு முகாம்

இதற்கிடையே வாக்காளர்களின் வசதிக்காக கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 103 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் இளைஞர்கள், பெண்கள் ஆர்வமுடன் வந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர்.

அந்த வகையில் 2 நாட்களில் மட்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 38 ஆயிரத்து 438 பேர் விண்ணப்பித்தனர். அதேபோல் பெயரை நீக்குவதற்கு 1,627 பேரும், திருத்தம் செய்வதற்கு 3 ஆயிரத்து 506 பேரும், இடமாறுதல் செய்வதற்கு 2 ஆயிரத்து 300 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. இதையடுத்து விண்ணப்பங்கள் குறித்து வீடு, வீடாக சென்று விசாரணை செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story