நிவர் புயல் முன்எச்சரிக்கை: நீலகிரியில் மாநில பேரிடர் மீட்பு படை தயார் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேட்டி
நிவர் புயல் முன்எச்சரிக்கையாக நீலகிரியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயாராக உள்ளனர் என்று கலெக்டர் பேட்டி அளித்தார்.
ஊட்டி,
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் அறிவுரைப்படி நீலகிரி மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மலைப்பகுதி என்பதால் காற்று அதிகமாக வீசக் கூடும். இதனால் நெடுஞ்சாலைகளில் இடையூறு ஏற்படாத வகையில், ஆபத்தான விழக்கூடிய மரங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன. மண்சரிவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பொக்லைன் எந்திரங்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
நிவர் புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரியில் பயிற்சி பெற்ற மாநில பேரிடர் மீட்பு படையினர் 40 பேர் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் NeedDஎன்ற செயலி மூலம் அலுவலர்கள், முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம். இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் அதிக மழை மற்றும் காற்று இருக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மண்சுவர் வீடுகள், மேற்கூரை சரியில்லாத வீடுகளில் வசிப்பவர்கள் அருகே உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று தங்கிக் கொள்ளலாம். இதற்காக 456 முகாம்களில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, உணவு போன்ற வசதிகள் மேற்கொள்ளப்படும்.
மண்டல குழுவினர் ஆய்வு
நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயகரமான பகுதிகளான 283 இடங்களில் 42 மண்டல குழுவினர் ஆய்வு நடத்தி கண்காணித்து வருகின்றனர். இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்பட்டால் 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். ஊட்டி வருவாய் கோட்டம் 0423-2445577, குன்னூர் கோட்டம் 0423-2206002, கூடலூர் கோட்டம் 04262-261295, ஊட்டி தாலுகா 0423-2442433, குன்னூர் தாலுகா 0423-2206102, கோத்தகிரி தாலுகா 04266-271718, குந்தா தாலுகா 0423-2508123, கூடலூர் தாலுகா 04262-261252, பந்தலூர் தாலுகா 04262-220734 ஆகிய எண்களில் கட்டுப்பாட்டு மையங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
அபராதம்
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு வசித்தவர்களுக்கு மாற்றிடம் வழங்கப்படுகிறது. நீர் நிலைகளை ஒட்டி வசிப்பவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதால் குடிசை மாற்று வாரியம் சார்பில் ஊட்டி அருகே பிரகாசபுரத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. நீலகிரியில் கொரோனா பாதிப்பு தினமும் 25 முதல் 30 பேருக்கு உறுதியாகி வருகிறது. 2-வது அலை வீச வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அரசின் வழிமுறைகளை கடைபிடித்து கவனமாக இருக்க வேண்டும். தொற்று பரவும் வகையில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
5 ஆயிரம் மணல் மூட்டைகள்
நீலகிரி மலை மாவட்டம் என்பதால் ஒரே இடத்தில் தண்ணீர் தேங்கி நின்றால் மண் ஊறி மண்சரிவு அல்லது நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஊட்டி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 5 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையான பர்லியார் முதல் ஊட்டி வரை 20-க்கும் மேற்பட்ட மரங்கள் விழக்கூடியது என கண்டறியப்பட்டு ஏற்கனவே வெட்டி அகற்றப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story