தூத்துக்குடி அருகே பரபரப்பு: நடுக்கடலில் படகில் கடத்திய ரூ.500 கோடி ஹெராயின் சிக்கியது இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது; நவீன ரக கைத்துப்பாக்கிகள் பறிமுதல்


தூத்துக்குடி அருகே பரபரப்பு: நடுக்கடலில் படகில் கடத்திய ரூ.500 கோடி ஹெராயின் சிக்கியது இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது; நவீன ரக கைத்துப்பாக்கிகள் பறிமுதல்
x

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகில் கடத்திய ரூ.500 கோடி ஹெராயின் சிக்கியது. இதுதொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்து, 5 நவீன ரக கைத்துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் உள்ளதா?, ஏதேனும் போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்பது குறித்து கடலோர காவல்படையினர், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கடலோர காவல்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே கடலோர காவல்படையினர் உஷார்படுத்தப்பட்டனர். தூத்துக்குடி கடலோர காவல்படையில் உள்ள 3 ரோந்து கப்பல்களிலும் கடந்த 17-ந் தேதி முதல் இரவு, பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு தெற்கே கடலோர காவல்படை ரோந்து கப்பல் ‘வைபவ்’ கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது, அந்த பகுதியில் இலங்கையைச் சேர்ந்த ஒரு படகு வந்தது. அதில் அந்த நாட்டைச் சேர்ந்த 6 பேர் இருந்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை வழிமறித்தனர். தொடர்ந்து அந்த படகில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது படகில் காலியாக இருந்த டீசல் டேங்கின் உள்ளே சிறிய வெள்ளை நிற பாக்கெட்டுகள் அதிகளவில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

அதனை வெளியில் எடுத்தபோது 99 பாக்கெட்டுகள் இருந்தன. இதில் மொத்தம் சுமார் 100 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த படகு முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, படகின் அடிப்பகுதியில் 20 பெட்டிகளில் பல்வேறு போதைப்பொருட்கள் கலந்த செயற்கை போதைப்பொருட்களும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த படகில் 9 எம்.எம். ரக நவீன கைத்துப்பாக்கிகள் 5-ம் இருந்தன. படகில் இருந்தவர்கள் தகவல் தொடர்புக்காக தடை செய்யப்பட்ட ‘துரையா’ வகை சேட்டிலைட் செல்போனை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக கடலோர காவல்படையினர் போதைப்பொருட்கள், துப்பாக்கிகள், சேட்டிலைட் செல்போன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.500 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் படகில் இருந்த 6 பேரையும் கடலோர காவல்படையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு படகில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி வருவதாகவும், ஆஸ்திரேலியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் படகுடன் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

பின்னர் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், கடலோர காவல்படையினர் தீவிர விசாரணை நடத்த உள்ளனர். மேலும் விசாரணைக்காக கைதானவர்களை சென்னைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகில் கடத்திய ரூ.500 கோடி ஹெராயின் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

படகில் சிக்கிய ‘கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன்’ போதைப்பொருள்
நடுக்கடலில் சிக்கிய படகில் 20 பெட்டிகளில் ‘கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன்’ என்ற செயற்கை போதைப்பொருளையும் பறிமுதல் செய்து உள்ளனர். இந்த போதை பொருள் சுமார் 3 கிலோ இருந்ததாக கூறப்படுகிறது. இதன் சர்வதேச மதிப்பு மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது. இலங்கையை சேர்ந்த ரவுடி அங்கடலொக்கா இந்த வகையான போதைப்பொருளை அதிக அளவில் கடத்தி வந்தது தெரியவந்து உள்ளது. அவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புடைய கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் போதைப்பொருளை கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

கடத்தல் கும்பலுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பா?
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகில் கடத்தி செல்லப்பட்ட ரூ.500 கோடி மதிப்புள்ள 100 கிலோ ஹெராயின் மற்றும் ஆயுதங்களை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இந்த போதைப்பொருளை பாகிஸ்தானை சேர்ந்த சிலர் நடுக்கடலில் வைத்து இலங்கையை சேர்ந்த படகில் வந்தவர்களிடம் ஒப்படைத்து உள்ளனர். இதனால் கடத்தல்காரர்களுக்கும், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதற்கான இது போன்று போதைப்பொருட்கள் கடத்தல் நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். போதைப்பொருட்களை கொடுத்தவர்கள் யார்? என்பது குறித்து கடலோர காவல்படையினர் தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிகிறது.

Next Story